தன் மீதான மனுவை தானே தள்ளுபடி செய்த நீதிபதி

சென்னை: சிறுதாவூர் நில அபகரிப்பு தொடர்பான விசாரணை கமிஷன் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியத்தை பதவி விலகக் கோரும் மனு அவர் முன்பாகவே விசாரணைக்கு வந்தது. தன் மீதான மனுவை தானே தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி சிவசுப்ரமணியம்.

திமுக சார்பில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழுவில் சிறுதாவூர் விசாரணை கமிஷன் நீதிபதி சிவசுப்பிரமணியம் பெயரும் இடம் பெற்றிருந்தது. பின்னர் நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பெயர் நீக்கப்பட்டது.

இந்நிலையில் பரணி பீச் ரிசார்ட்ஸ் இயக்குநர் சித்ரா, நீதிபதி முன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிறுதாவூர் நில அபகரிப்புப் புகார் தொடர்பாக நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிஷன் விசாரணை செய்து வருகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக திமுக அமைத்துள்ள குழுவில் நீதிபதி பெயரும் இடம்பெற்றுள்ளதால், நீதிபதி திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, நீதிபதி தானாக விசாரணை கமிஷனிலிருந்து பதவி விலக வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரியான நீதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகைகளிடம் நீதிபதி விளக்கம் அளிக்க முடியாது.

இலங்கைத் தமிழர் உரிமை நலப் பேரவையின் அமைப்பாளருக்கு, துணைக் குழுவில் இருந்து எனது பெயரை நீக்கும்படி கோரி கடிதம் எழுதினேன். எனது பெயர் நீக்கப்பட்டதாக பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது.

இந்த நிலையில், 6 நாள்கள் கழித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீவிரமான குற்றச்சாட்டுகளை மிக சாதாரண முறையில் வெளிப்படுத்துவது சரியானது அல்ல.

சிறுதாவூர் நில விவகாரம் தொடர்பான மற்ற பிரதிவாதிகள் எந்தப் புகாரும் அளிக்காதபோது, மனுதாரர் சித்ரா மட்டும் மனுவுக்கு மேல் மனுவாக போட்டு, விசாரணையை தாமதப்படுத்துகிறார். இதுகுறித்து விளக்கமாக ஒரு உத்தரவு பிறப்பிக்க எண்ணினேன்.

அதற்கிடையில், மனுவை மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

துணைக் குழுவிலிருந்து பெயர் நீக்கப்பட்ட விவகாரம் தெரியாது என்று மனுதாரர் கூறியுள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார். சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.