பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம், புலிகள் சிறுவர்களை ஆயுதமேந்தச் செய்வது: ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் கஜேந்திரன்

வன்னியில் இருந்து வெளியேறும் பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும், புலிகள் சிறுவர்களை ஆயுத மேந்தச் செய்வதாகவும் வெளிவந்த ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை முழுமையாக மறுக்கின்றோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கை அரசாங்கம் வன்னியிலுள்ள 415000 வரையான மக்களை இலக்கு வைத்து தொடர்ச்சியான படுகொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில். இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்புச் செற்பாடுகளுக்கு துணை போகும் வகையில் ஐ.நா.சபையும் யுனிசெவ் நிறுவனமும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வன்னியில் உள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடை செய்வதாகவும் அங்கிருந்து வெளியேற முற்படுபவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுடுவதாகவும் ஆதாரமற்ற அறிக்கைகளை ஐ.நா.சபை வெளியிட்டுள்ளது.

வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து சிங்கள அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளால் அங்கு வாழ முடியாத நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களில் பெருமளவானவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்களில் 190 ஆண்கள் படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு அனுராதபுரம் காடுகளில் புதைக்கப்பட்டுவிட்டனர். அதேவேளை 130 இளம் பெண்கள் படையினரால் கைது செய்யப்பட்டு படையினரது பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனை விடவும் பெருமளவு பெண்களை படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் எஞ்சியவர்களை ஆண்கள் வேறாகவும் இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார்கள் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பெருமளவானோர் படையினரால் விசாரணைகளுக்கு என்ற பெயரில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளுக்குள் அழைக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சில பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கும் போது அதனை வீடியோகளில் சக படையினர் பதிவு செய்தும் வருவதான உண்மைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான கொடுமைகளுக்குள் அகப்பட்டு வாழும் மக்கள் படையினர் விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில் இருப்பர் என்ற யதார்த்தத்தினை ஐ.நா. அதிகாரிகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டமை கவலையளிக்கின்றது. இந் நிலையில் இராணுவத்தினரும் இனஅழிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கமும் விரும்பும் வகையில் அறிக்கைகளை ஐ.நா. வெளியிடுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருவதுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களின் பாதுகாப்பை முழுமையாக ஐ.நா. பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று வன்னியில் இருந்து வெளியேறியுள்ள யுனிசெவ் நிறுவனம் தமது கடப்பாடுகளை எல்லாம் மறந்து வன்னியில் நாளாந்தம் சிதறி சின்னா பின்னமாகி செத்து மடியும் குழந்தை குஞ்சுகளை பற்றியெல்லாம் எவ்வித அக்கறையும் கொள்ளாமல் இருந்து கொண்டு வன்னியில் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைப்பதாக ஆதராமற்ற வகையிலான குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதனையும் நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறான அறிக்கைகள் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் இன அழிப்பு போர் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவே வழி வகுக்கும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஐநா உடனடியாக இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் மக்கள் மீது அரசு மேற் கொண்டு வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றேன்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.