வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் கோரிக்கை

வன்னியில் பொதுமக்கள் பிரதேசங்கள் மீது நடத்தப்பட்டு வரும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.


யுத்தத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்வடைந்து செல்லும் துயர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் தமக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை எனவும், வன்னிப் பிரதேச மக்களின் அவல நிலை பெரிதும் வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவரோ, தமிழரோ அல்லது முஸ்லிமோ உயிர் என்பது யாவருக்கும் மிகவும் விலைமதிப்பற்றதொன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உக்கிர யுத்த சூழ்நிலையில் படைவீரர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகத் துல்லியமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

என்ன விலை கொடுத்தோனும் அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் 288 பேர் உயிரிழந்திருப்பதுடன், 766 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தினத்தில் மட்டும் 55 பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைகளின் காரணமாக மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அரசாங்க இராணுவத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.