இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டம்!

சென்னை; இலங்கை அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ் நாராயணமூர்த்தி, அந்தப் பதவியை ஏற்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரே இலங்கை தமிழர் போராட்டக் குழுவினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அனைத்து இன்போசிஸ் அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை அரசின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

இலங்கையில் ராணுவத்தின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, தமிழர்களால் பெரும் முன்னேற்றமடைந்த இன்போசிஸ் நிறுவனத் தலைவர் மகிந்த ராஜபக்சே அரசுப் பதவியை ஏற்பதை தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் இதைக் கண்டித்து நேற்று ஆர்ப்பட்டம் நடத்தினர். நாராயணமூர்த்தியின் உருவப் பொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

‘இலங்கை அதிபரின் தகவல் தொழிற்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை சம்பவங்கள் குறித்து இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி நன்கு அறிந்திருந்தும், இந்தப் பதவியை ஏற்க அவர் இலங்கைக்கு ஓடோடிச் சென்றது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை ஆலோசகர் பொறுப்பை ஏற்கமாட்டேன் என நாராயணமூர்த்தி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவிக்க வேண்டும். இன்போசிஸ் நிறுவனம் தமிழர்களாலும் தமிழகத்திலேயுமே வளர்ந்தது. எனவே இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்கள் நாராயணமூர்த்திக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

இன்போசிஸ் அலுவலகங்கள் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நாராயணமூர்த்தி உருவப் பொம்மை எரிப்பு ஆகியவற்றிலும் இனி ஈடுவோம் என்று கூறினர்.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள இன்போசிஸ் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இன்போஸிசின் பிற அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.