இலவச ‘காஸ்’க்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்?: பெட்ரோலிய நிறுவனங்கள் திடீர் கட்டுப்பாடு

குன்னூர்: தமிழகத்தில் இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு, ஓராண்டுக்கு 6 சிலிண்டர் மட்டுமே வழங்க வேண்டும் என பெட்ரோலிய நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளதால், இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும்’ என தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும், கடந்த 2007ம் ஆண்டு ஜன., 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று, இலவச சமையல் காஸ் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.

இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மூலம் காஸ் சிலிண் டர்கள் வினியோகம் செய்யப் பட்டன. ரேஷன் கார்டுக்கு 10 லிட்டர் கெரசின் பெற்று வந்த பயனாளிகளுக்கு மூன்று லிட்டராக குறைக்கப் பட்டது. மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டருக்குரிய தொகையை மட்டும் செலுத்தி, சிலிண்டரை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பெட்ரோலிய நிறுவன வினியோகஸ்தர் மூலம் சிலிண்டர் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 1ம் தேதி முதல், இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே வழங்க வேண்டும் என பெட்ரோலிய நிறுவனங்கள் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளன.

கள்ள மார்க்கெட் விற்பனை காரணம்?: கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் இலவச காஸ் இணைப்பை பெற்று கொடுக்கின்றனர். அப்பகுதி மக்கள் கெரசின், விறகு போன்றவற்றையே எரி பொருளாக பயன்படுத்த ஆர்வம் காட்டுவதால், இலவச சமையல் காஸ் சிலிண்டரை மற்றவர்களுக்கு விற்கின்றனர். சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்களிடம் இருந்து சிலிண்டரை பெறும் நபர்கள், கள்ள மார்கெட்டில் 500 முதல் 600 ரூபாய்க்கு விற்கின்றனர். ஹோட்டல், டீக்கடைகளுக்கு பயன்படும் வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை 1,000 ரூபாயை தொடுவதால், ஹோட்டல், டீக்கடைக்காரர்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டரை வாங்குகின்றனர். இதை கட்டுப்படுத்த தான் பெட்ரோலிய நிறுவனங்கள் இத்தகைய கட்டுப் பாட்டை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற மக்கள் திணறல்: நகர்ப்புற மக்கள் இலவசசமையல் காஸ் இணைப்பை முறையாக பயன்படுத்துகின்றனர்; 30 முதல் 40 நாளுக்கு ஒரு முறை காஸ் சிலிண்டரை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் பதிவு செய்து பெறுகின்றனர். இலவச சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள கட்டுப்பாடால், 40 நாளுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில், ஆண்டுக்கு 10 சிலிண்டர் பெற்று வந்த பயனாளிகள், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்ட மக்கள் திண்டாட்டம்: நீலகிரி போன்ற குளிர் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு எரிபொருள் தேவை அதிகம்; இலவச சமையல் காஸ் இணைப்பை பெற்ற மக்களுக்கு மூன்று லிட்டர் கெரசின் மட்டுமே வழங்கப்படுகிறது; விறகு தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது ஆறு சிலிண்டர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், இன்னும் ஓரிரு மாதத்தில் தமிழகம் முழுவதும் நான்கு லட்சம் பேருக்கு மூன்றாவது கட்டமாக இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு முழு வீச்சில் நடந்து வருகிறது. ”ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படவுள்ள நிலையில், புதிதாக இலவச சமையல் காஸ் இணைப்பை வழங்கினால், மக்கள் பெரிதும் பாதிப்படைவர்; காஸ் வினியோகத்தில், அவர்களை திருப்திபடுத்த முடியாது,” என காஸ் வினியோக நிறுவனங்கள் புலம்புகின்றன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.