அட்லாண்டிக் கடலில் அணு நீர்மூழ்கி கப்பல்கள் மோதல்

லண்டன் : பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இம்மாத முற்பகுதியில் அட்லாண்டிக் கடல் பகுதியில் மோதியுள்ளன. அணு ஆயுதங்களுடன் கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மோதினாலும், எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும், “சன்’ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன் நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் எச்.எம்.எஸ்., வான்கார்டு. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் லீ டிரியோம்பன்ட். அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும், இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் இம்மாத முற்பகுதியில் அட்லாண்டிக் கடல் பகுதியில் மோதிக் கொண்டன. இந்த மோதல் சம்பவத்தில் இரு நீர்மூழ்கிக் கப்பல்களும் கடும் சேதமடைந்தன. இருந்தாலும், அவற்றில் உள்ள அணு உலைகளுக்கோ அல்லது அணு ஆயுதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மோதலில் சேதமடைந்த பிரிட்டன் நீர்மூழ்கிக் கப்பல், ஸ்காட்லாந்தில் உள்ள பாஸ்லேனுக்கு ரிப்பேருக்காக இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இருந்தாலும், பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பலின் நிலை என்னவென்று தெரியவில்லை. இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களிலும் 250 மாலுமிகள் இருந்தனர். இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் கடந்த 3 அல்லது 4ம் தேதியன்று மோதியிருக்கலாம்.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடு தொடர்பாக பிரிட்டன் ராணுவ அமைச்சகம் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது. இருந்தாலும், அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளர், “பிரிட்டனின் அணுஆயுத திறனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அணு ஆயுத பாதுகாப்பு விஷயத்தில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லை.”பிரிட்டன் ராணுவ அமைச்சகத்தால், இயக்கப்படும் அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று தான் எச்.எம்.எஸ்., வான்கார்டு. எங்களிடம் உள்ள ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 150 மீட்டர் நீளம் கொண்டது. 13 மீட்டர் விட்டம் கொண்டது. 16 ஏவுகணைகள் உட்பட 48 அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்’ என்றார்.

பிரிட்டன் ராணுவ அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியதாவது:அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் மோதினால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். அப்படி அணு ஆயுத வெடிப்பு நிகழ்வது விரும்பத்தக்கது அல்ல. மேலும், அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் மோதும் போது, கதிர்வீச்சுக்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. அப்படி மோதல் ஏதும் நிகழ்ந்திருந்தால், அதில் பணியாற்றியவர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பர். ஆயுதங்களும் அழிந்திருக்கும். அது மிகப்பெரிய தேசிய பேரிடராகவே இருக்கும். கடலில் ஒரே பாதையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் வருவதற்கு, வாய்ப்புகள் மிக மிக குறைவு. மேலும், போர்க் கப்பல்களில் உள்ள சோனார் கியர்கள், ஒலி அலைகள் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள் வருவதை கண்டுபிடித்து விடும். இவ்வாறு பிரிட்டன் ராணுவ அதிகாரி கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.