சென்னை ‘ஆன்-லைன்’ வியாபாரி கொலை : சிவகங்கை வாலிபர்கள் கோர்ட்டில் சரண்

சிவகங்கை : ஆன்-லைன் வர்த்தக வியாபாரியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட இரண்டு வாலிபர்கள், நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(42); “ஆன்-லைன் மார்க்கெட்டிங்’ தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 12ம் தேதி எழும்பூரிலுள்ள, “இம்பீரியல்’ தனியார் லாட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிந்தது. லாட்ஜில் தங்கிய சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர்களின் முகவரியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணமூர்த்திக்கும், சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே காஞ்சிரம் வீரையா மகன் சேகருக்கும்(22) தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.

பணப்பிரச்னை: சில மாதங்களுக்கு முன் சேகர், காளையார்கோவிலில் வாடகைக்கு ரூம் எடுத்து ஆன்-லைன் மூலம் சென்னைக்கு தொடர்பு கொண்டு தொழில் செய்து வந்தார். இவருடன், காஞ்சிரம் வேலு மகன் பாலமுருகன்(20) தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தார்.

இருவரும் அவ்வப்போது லட்சக்கணக்கில் ஆன்-லைனில் பணம் போட்டு, குறிப்பிட்ட தொகையை லாபமாக பெற்று வந்தனர். இதை நம்பி சில மாதங்களுக்கு முன் சேகரும், பாலமுருகனும் 10 லட்சம் ரூபாய் வரை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். இதற்கான பங்குத் தொகையை அவர் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சென்னையில் கொலை: அவரை சந்திக்க கடந்த 12ம் தேதி சென்னை எழும்பூர் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சேகர் மற்றும் பாலமுருகன் ரூம் எடுத்து தங்கினர். அறைக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியிடம் 10 லட்சம் ரூபாய் பிரச்னை குறித்து பேசியதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

தாக்க முயன்ற கிருஷ்ணமூர்த்தியை சேகர் மற்றும் பாலமுருகன் சேர்ந்து தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கழிவறைக்குள் போட்டு விட்டு இருவரும் தலைமறைவாகியதாக தெரியவந்துள்ளது.

கோர்ட்டில் சரண்: அவர்களை பிடிக்க எழும்பூர் தனிப்படை போலீசார் இரண்டு நாட்களாக சிவகங்கையில் முகாமிட்டிருந்தனர். சிவகங்கை போலீசார் தனியாக தேடிவந்தனர். இந்நிலையில், சேகர், பாலமுருகன், சிவகங்கை ஜே.எம்., முதலாவது கோர்ட்டில் வக்கீல் முருகனுடன் நேற்று காலை சரணடைந்தனர். வரும் 23ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க மாஜிஸ்திரேட் அனுராதா உத்தரவிட்டார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.