பெங்களூரில் பயங்கரம் – விஞ்ஞானி, மனைவி, மகன் படுகொலை

பெங்களூர்: பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி, அவரது மனைவி, மகன் ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பெங்களூர் ஆர்.டி.நகர் 80 அடி ரோட்டில் வசித்து வந்தவர் புருஷோத்தம் லால் சச்தேவ் (64). இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது அதே நிறுவனத்தில் பகுதி நேர கவுரவ பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

விஞ்ஞானி சச்தேவின் மனைவி பெயர் ரீட்டா (60). இந்த தம்பதியின் மகன் முன்னா (35).

முன்னா மனநலம் குன்றியவர். மேலும் உடல் ஊனமுற்றவரும் கூட. இவர்களுடன் சச்தேவின் வளர்ப்பு மகன் அனுராக்கும் உடன் இருந்தார்.

இந்த நிலையில் சச்தேவின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு கிடந்தது.

இதுபற்றி ஆர்.டி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சச்தேவ், அவரது மனைவி ரீட்டா, மகன் முன்னா ஆகிய 3 பேரும் தனித்தனி படுக்கை அறைகளில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளர்ப்பு மகன் அனுராக்கிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.