பட்ஜெட் 2009-10 தாக்கல் செய்தார் அன்பழகன்

சென்னை: தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் இன்று சட்டசபையில் 2009-10ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 21ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடந்தது.

இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியதும் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அன்பழகன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் உரை இது. வழக்கமாக பிப்ரவரி இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதத்திற்கு நடைபெறும் எனத் தெரிகிறது. பட்ஜெட் வாசிப்புக்குப் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத் தொடரின் கால அளவு குறித்து முடிவு செய்யப்படும்.

கருணாநிதி பங்கேற்காத பட்ஜெட்

முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்பொழுது அவர் பங்கேற்காத முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடியே, தனது உதவியாளர் சண்முகநாதனை விட்டு பட்ஜெட்டை வாசிக்கக் கேட்டு, அதில் பல திருத்தங்களையும், அறிவுரைகளையும் கூறி பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார் முதல்வர்.

நேற்று காலை எட்டேகால் மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை பட்ஜெட்டை வாசிக்கக் கேட்டு மாற்றங்களைச் செய்துள்ளார் கருணாநிதி.

இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் வழக்கம் போல அனல் பறக்கும் என கருதலாம்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.