தமிழகத்தில் நாட்டின் முதல் கிராமப்புற பிபிஓ

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சனசந்திரம் கிராமத்தில் நாய் குட்டிகளை விற்று வந்த இளைஞர் இன்று அப்பகுதியில் தொடங்கப்பட்ட ஊரக பிபிஓவின் புண்ணியத்தால், கால் சென்டர் ஊழியராகியுள்ளார்.


தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் கிருஷ்ணகிரிதான். இந்த மாவட்டத்தின் சனசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிராஜ். 12வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். ஆங்கிலம் பேசத் தெரியாது. அந்தக் கிராமத்தில் நாய்க் குட்டிகளை விற்று வந்தார்.

இதெல்லாம் பழைய கதை. அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு வரை முரளிராஜின் பயோடேட்டா இதுதான். ஆனால் அன்று முரளிராஜைப் பார்ப்பவர்கள் பிரமித்துப் போகிறார்கள். காரணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது ஊரக பிபிஓ வான போஸ்டரா.

போஸ்டரா, முரளிராஜின் வாழ்க்கையை அப்படியே மாற்றிப் போட்டுள்ளது.

அப்படி என்னதான் நடந்தது. தலையில் ஹெட்போன் தவழ, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்ளுடன் சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் முரளிராஜ் கூறுகிறார் …

நான் 12வது வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. இந்த நிலையில்தான் நான் போஸ்டராவை அணுகினேன். ஆனால் இன்று எனது நிலை சுத்தமாக மாறிப் போய் விட்டது என்கிறார் முரளிராஜ்.

போஸ்டரா, தமிழக அரசே நடத்தும் பிபிஓ ஆகும். சனசந்திரம் கிராமத்தில்தான் இது உள்ளது. கடன் வசூல், கிரெடிட் கார்டுகள் வழங்கல், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அவுட்சோர்சிங் பணிகளை இது செய்கிறது.

அடுத்த 3 மாதங்களில், தமிழகத்தின் கிராமப் பகுதிளைச் சேர்ந்த 500 இளைஞர்களை இந்த நிறுவனம் பணியில் சேர்க்கவுள்ளதாம். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை தரப்படுமாம்.

தற்போது ஒரே ஷிப்ட்டில் இயங்கும் இந்த போஸ்டரா பிபிஓ, விரைவில் 3 ஷிப்ட் முறைக்கு மாறவுள்ளது என்கிறார் இதன் தலைமை செயலதிகாரி அசோக் குமார்.

12வது வகுப்பு படித்த, 10ம் வகுப்பு படித்த விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குழ்நதைகள் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர முன்னுரிமை தரப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

தற்போது இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சியில் இருந்து வருகிறார்கள். நல்ல திறமையுடைய, கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடைய, தகவல் தொடர்பில் திறமையுடைய கிராமப்புற இளம் பெண்கள், ஆண்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பணிக்கு அழைக்கிறோம் என்கிறார் அசோக் குமார்.

தற்போது போஸ்டரா அலுவலகத்தில் 25 பேர் பணியாற்ற முடியும். விரைவில் ஊத்தங்கரை தாலுகாவில் 2 கால் சென்டர்களை அது ஆரம்பிக்கவுள்ளது. அவற்றில் தலா 75 பேர் பணியாற்ற முடியுமாம்.

ஊத்தங்களை தாலுகாவில், வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் உள்ளது. கல்வியறிவும் இங்கு குறைச்சல்தான். இங்குள்ள கல்யாண மண்டபங்கள் தற்போது பிபிஓ மையங்களாக மாறி வருகின்றன. 18 வயதைத் தாண்டி, பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகி வருவது ஊத்தங்கரை விரைவில் டாப்புக்குப் போகும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனம், சமீபத்தில் ஆன்லைன் வாக்காளர் பெயர்ப் பதிவு தொடர்பான சோதனை ரீதியிலான திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தபோது அந்தப் பணிக்கு போஸ்டராவைத்தான் அவுட்சோர்சிங்குக்குப் பயன்படுத்திக் கொண்டது என்பது போஸ்டராவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

சரி போஸ்டரா என்றால் என்ன? ‘fostering rural technology’ என்பதன் சுருக்கமே போஸ்டரா என்கிறார் அசோக் குமார்.

நாய்க்குட்டி விற்ற முரளிராஜ் இன்று நீட்டான டிரஸ்ஸில், கழுத்தில் டையும், காதுகளில் ஹெட்போனுமாக கலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், மைக்ரோ அளவில் உள்ள ஊரக திறமைகள் விரைவில் மெகா சைஸுக்கு பிரகாசமாகும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கிறது.

Source & thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.