புலனாய்வு: இந்தியா-பாக்.. மீடியேட்டராக சிஐஏ

டெல்லி: மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரிமாறிக் கொள்ள அமெரிக்காவின் சிஐஏ பெரும் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ரகசிய மீடியேட்டராக சிஐஏ செயல்பட்டுள்ளது.


இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளும் மும்பைத் தாக்குதல் தொடர்பான பல்வேறு புலனாய்வுத் தகவல்களை ரகிசயமான முறையில், பரிமாறிக் கொள்ள சிஐஏ உதவியது. இரு நாடுகளுக்கும் பொதுவான மத்தியஸ்த பணியை சிஐஏ செய்துள்ளது.

இந்தத் தகவல் பரிமாற்றத்தால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த பரஸ்பர சந்தேகங்கள் படிப்படியாக விலகி, கடந்த வாரம், பாகிஸ்தான் தனது மண்ணில்தான் சதித் திட்டத்தின் ஒரு பகுதி உருவானதாக ஒப்புக் கொள்ளும் அளவுக்கு இட்டுச் சென்றது.

மேலும், பாகிஸ்தானிடமிருந்து பல்வேறு புலனாய்வுத் தகவல்களை இந்தியா பெறவும் சிஐஏ உதவியுள்ளது.

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பத்து தீவிரவாதிகள் குறித்த விவரங்கள், அவர்களுக்கிடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள், பேச்சுக்கள் மற்றும் மேலும் பல ஆதாரங்களையும் சிஐஏ உதவியுடன் இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன.

இரு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் தங்களுக்க் கிடைத்த தகவல்களை சிஐஏயிடம் கொடுத்தன. பதிலுக்கு அவற்றை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் சிஐஏ வழங்கியுள்ளது

தற்போதும் கூட இரு நாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்ற மீடியமாக சிஐஏ செயல்பட்டு வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

இதுவரை மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான எப்பிஐ ஈடுபட்டிருந்தது மட்டுமே வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரகசியமான முறையில் சிஐஏ பணியாற்றியது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.