‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னி யுத்தத்தில் சிக்கி காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 175 பேர் சிகிச்சை முடிந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிய காயங்களுக்குள்ளானவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை
வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இருதடவைகளில் கடல் வழியாக நோயாளர்கள் மற்றும்
காயமடைந்தவர்கள் என சுமார் 700 பேர் அழைத்து வரப்பட்டு இவ்வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலை தகவல்களின்படி அங்குள்ள இடநெருக்கடியைத் தவிர்க்கும் வகையில்
காயமடைந்தவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் வைத்தியசாலைக்கு 52 பேர் மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 100 பேர் பொலன்னறுவை
வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருக்கின்றார்கள். இன்று திங்கட்கிழமை முல்லைததீவிலிருந்து
மற்றுமொரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே காயங்களுக்கு உள்ளானவர்களில் 317 பேருக்கு சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை
இரத்த வங்கியிலிருந்து 100 இரத்தப்பைகள் அவசரமாக எடுத்து வரப்பட்டதாக வைத்தியசாலை
நிர்வாகம் தெரிவிக்கின்றது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து நேற்று 109 பொதுமக்கள்
இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரிடம் பாதுகப்பு கோரி வந்துள்ளனர். பருத்தித்துறை,
புல்மோட்டை மற்றும் விசுவமடு வடகேயுள்ள இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரிடம் இவர்கள்
சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 20 சிறுவர்கள் உள்ளடங்கலாக 78 பொதுமக்கள் மூன்று குழுக்களாக படகுமூலம்
முல்லைத்தீவில் பாதுகாப்பு படையினரிடம் பாதுகாப்புக் கோரி வந்துசேர்ந்துள்ளனர். மேலும்
10 பெண்கள் ,8 சிறுவர்கள் உள்ளடங்கலாக 25 பொதுமக்கள் நேற்றுக் காலை 8 மணியளவில்
பருத்தித்துறை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். அதேவேளை மேலுமொரு குழுவினர்
புல்மோட்டையில் கடற்படையினரிடம் பாதுகாப்பு கோரி வந்து சேர்ந்துள்ளதாக பாதுகாப்பு
அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது

!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனவாத அரசாங்கத்துடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் கட்சிகளுக்கு
மலையகத் தமிழ்பேசும் மக்கள் தகுந்த பாடத்தினைப் புகட்டியுள்ளனர் என்று ஜனநாயக மக்கள்
முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வாக்குரிமையைப் பயன்படுத்தி, விரும்பிய உறுப்பினர்களைத் தெரிவு செய்தமைக்காக மலையகத்
தமிழ்ப் பேசும் மக்கள் மீது தீயசக்திகளால் வன்முறைகள் திணிக்கப்படுமாயின் அதற்கு
எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே ஜனநாயக மக்கள்
முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“ஐ.தே.கவின் மானத்தைக் காப்பாற்றிய பெருமை மலையகத் தமிழ் பேசும் மக்களையே சாரும். எனவே
தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிப்பதற்கு
ஐ.தே.கவின் தலைமை முன்வர வேண்டும்.

எந்த ஒரு தேர்தல் வெற்றியையும் இறுதி நேரத்தில் நிர்ணயிப்பது சிறுபான்மையின மக்களே.
நடந்து முடிந்த இரு மாகாணசபைத் தேர்தல்களிலும் குறிப்பாக மத்திய மாகாணத்தில் தமிழர்கள்
செறிந்து வாழும் பிரதேசமான நுவரெலியா மற்றும் மஸ்கெலியா ஆகிய தொகுதிகளில் ஐ.தே.கவுக்கு
பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், தம்மைப் பாதுகாக்க வேண்டிய மலையகத்தின்
பிரதான கட்சிகளின் துரோகச் செயல்கள் என்பன மத்திய மாகாண தமிழ்ப் பேசும் மக்களைப்
பெரிதும் பாதித்து விட்டன. எம்மை ஆதரித்த இம்மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுப்பதே எனது
அவாவாகும்” என்றார்

!!!!!!!!!!!!!!!!

மத்திய மாகாண சபைத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி
கூட்டணிசார்பில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் எம்.திகாம்பரம்
ஆகக்கூடுதலாக 45,229 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணிசார்பில் ஜனநாயக மக்கள்
முன்னணிசார்பில் போட்டியிட்ட பிரகாஷ் கணேசன் 38,362 விருப்பு வாக்குகளைப் பெற்று
வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணிசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள ஏனையோரின் விபரம்
வருமாறு;

உதயா தொழிலாளர் தேசிய சங்கம் 32,409 வாக்கு, தயாரத்தின திஸாநாயக்க 21,350 வாக்கு,
கே.பியதாச 20,902, எஸ்.சதாசிவம் (இ.தொ.ஜ.முன்னணி) 20,460 வாக்கு, கணபதி ஜனகராஜ்
(இ.தொ.ஜ.முன்னணி) 15,577 வாக்கு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றோர் விபரம், பாலிய
திஸநாயக்க 39,005 வாக்கு, சி.பி.ரத்நாயக்கா 30,114 வாக்கு, எஸ்.தஸநாயக்கா 30,006
வாக்கு, ரமேஸ்வரன் (இ.தொ.காங்கிரஸ்) 21,524 வாக்கு, நிமாலினி பிரியரட்ண 19,961 வாக்கு,
எம்.ராம் (இ.தொ.காங்கிரஸ்) 18,990 வாக்கு, ஜெயரட்ண தஸநாயக்க 18,897 வாக்கு,
வீ.இராதாகிருஷ்ணன் (இ.தொ.காங்கிரஸ்) 18,513 வாக்கு, நிமால் பெரேரா 17,982 வாக்கு.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணி, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆகிய
கட்சிகளின்சார்பில் போட்டியிட்ட எவரும் தெரிவுசெய்யப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள்,
சிங்கள மக்கள் கொடுர யுத்தத்திற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளமையை காட்டுவதாக
அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பெயரைக் குறிப்பிட விரும்பாத சிங்கள கல்விமான் ஒருவரின் கருத்துப்படி, இந்தத்
தேர்தல் முடிவுகள், தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளியுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மக்கள், இந்த யுத்தத்திற்கு தமது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று விடயத்திலும் சிங்கள மக்கள் இதே
கொள்கையையே பின்பற்றுவர் என குறித்த சிங்கள கல்விமான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மலையகத்தின் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்கள் மத்திய மாகாண தேர்தலில் இந்த
அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக வாக்குகளை அளித்துள்ளார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் மஸ்கெலியா தொகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்கள் தமிழர்களாக
உள்ளநிலையில் அங்கும் கண்டி தொகுதியிலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து தமிழ்
மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இதில் நுவரெலியவில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமானுக்கும் அமைச்சர் சந்திரசேகரனுக்கும் மலையக மக்கள் தகுந்த பாடம்
புகட்டியுள்ளனர். 6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு
நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு
ஆசனமேனும் கிடைக்கவில்லை.

ஆறுமுகன் தொண்டமானுடைய கட்சியின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசியகட்சியின் மூலம் தெரிவான 5
தமிழர்களுக்கு அடுத்தபடியான விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளனர். இது தொண்டமானுக்கும்
சந்திரசேகரனுக்கும் மலையக மக்கள் தந்த வரலாற்று பாடம் என மலையக புத்திஜீவி ஒருவர்
தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிகளுடனேயே இருந்துக்கொண்ட மலையக மக்களின் வளர்ச்சிக்கு பாதமாக இருந்தமைக்காக
அவர்கள் சுமார் 50 வருடங்களின் பின்னர் கற்றுக்கொண்ட பாடம் என்றும் அந்த புத்திஜீவி
குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் முடிவுகள் நீதியானதும் நேர்மையானதுமான
பெறுபேறுகளைப் பிரதிபலிக்கவில்லை.

வாக்காளர்களின் கண்களைக்கட்டி வாக்களிப்பதற்காக பென்சிலை வழங்கிய தேர்தலாகவே இதனைக்
கூறமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

மனித சுதந்திரம், மனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் மக்களின்
கண்ணீரைத் துடைப்பதற்குமான போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்
என்றும் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி
விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“வன்முறை கரத்தினால் தனியார் ஊடகங்கள் அடக்கப்பட்டு அரச ஊடகங்களை பக்கச் சார்பாக
செயற்படுத்தி நடத்தப்பட்ட தேர்தலாக வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தலை நோக்கலாம்.
வாக்காளர்களின் கண்களைக் கட்டி வாக்களிப்பதற்காகப் பென்சிலை வழங்கிய தேர்தலாகவே இதனைக்
கூற முடியும்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளை கலைத்ததன் பின்னர் அதுவரை மேற்கொண்டுவந்த ஊடக
வேட்டை விரைவுபடுத்தப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பு மீதான தாக்குதல், சண்டே லீடர்
பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ரிவிர ஆசிரியர் உபாலி
தென்னக்கோன் மீதான தாக்குதல் போன்றவற்றின் ஊடாக ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை
அச்சுறுத்தி மக்களின் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை அழித்துவிட்டு தேர்தல் நடவடிக்கைள்
ஆரம்பிக்கப்பட்டன.

அரச ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் எதிராக சேறு
பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டன. யுத்தம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. தனியார்
ஊடகங்களையும் அந்த இடத்துக்கு தள்ளிவிடுவதற்கு முயற்சிக்கப்பட்டது. இந்த செயற்பாடானது
பிரசார நேரம் முடிவடைந்த பின்னரும் அரச ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் முப்படை தளபதியுமான ஜனாதிபதி தனது
அதிகாரத்தையும் பலத்தையும் தேர்தலுக்காகப் பயன்படுத்தினார். மக்களின் நிதியை செலவழித்து
வாக்காளர்களுக்கு விருந்துபசாரம் அளித்தன்மூலம் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டன.
சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டன.” இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விடுதலைப் புலிகள் இயக்கமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு
பிரதேசத்துக்குள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தையாவது பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கடந்த
10 தினங்களுக்குள் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்படும் தாக்குதல்கள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும் இந்தத் தாக்குதல்கள் படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. எனவே
அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பணயமாக வைத்திருக்கும் முயற்சியில் புலிகள்
தீவிரமாகியுள்ளனர்” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது:

“கடந்த இரு வார காலப்பகுதியில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து புலிகளின்
தாக்குதல்களுக்கு மத்தியிலும் 30ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இராணுவ
கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வந்துள்ளனர். தற்போதும் வந்துகொண்டிருக்கின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்குமிடத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ
முடியாது என்பது தெளிவாகிறது. தற்போது 30ஆயிரம் பேர் வரை அரச கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள் வந்துள்ளதால் மேலும் 70ஆயிரம் பேர் வரையானோரே அங்கு இருக்கக் கூடும் என
நாம் எதிர்பார்க்கிறோம்.

அம்மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எம்மால் கடல்வழியாக மட்டுமே
தற்போது அனுப்பி வைக்க முடியும்.

அரசாங்கத்துக்கு எதிராக விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கக் கூடிய மிகப்பெரிய
குற்றச்சாட்டே படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் என்பதாகும்.

சர்வதேசத்தின் அனுதாபத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் இவ்வகையான பிரசாரங்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயினும் கடந்த 2 வருட காலத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமானப் போர்
நடவடிக்கையின் போது பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.

எதிர்காலத்திலும் அவ்வாறான பாதிப்புகள் ஏற்படாது. அதற்காகவே பாதுகாப்பு வலயங்களைப்
பிரகடனப்படுத்தினோம்.

மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வரும் பொதுமக்களை வவுனியாவுக்கு அழைத்து
வருதல், தற்காலிக முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கான உணவு மற்றும் சிகிச்சைகள்
வழங்கல் போன்றவற்றை படையினர் சிறந்தமுறையில் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின்
அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டே வருகின்றன.

படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் குடியேற முடியும் என்று அப்பிரதேச
நிலங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கிய பின்னரே தற்போது தற்காலிக
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில்
மீளக்குடியமர்த்தப்படுவர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!

சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் போது எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகளைக் கருத்தில் கொள்ளாமல்
அரசியல் நீரோட்டத்தில் உள்ள சகல தமிழ்க்கட்சிகளும் அழைக்கப்படும் என்று ஜனாதிபதி
கூறியுள்ளார். தாய்லாந்து “ஏசியன் ரிபியூன்” இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில்
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு அனேகமாக ஒரு வாரத்தில் நடைபெறலாம்
என்றும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் அழைக்கப்படும் என்றும் கொழும்பில் அரச வட்டாரங்கள்
தெரிவித்தன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருகோணமலை வைத்தியசாலை வட்டாரப் பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் பிரவேசிக்கக் கூடாதென
அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
வடக்கு மோதல்களில் காயமடைந்த பொதுமக்கள் சிகிச்சைகளுக்கான திருகோணமலை வைத்தியசாலைக்கு
அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை
ஊடகவியலாளர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மோதல்களில் காயமடைந்த பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன்
கடந்த 11ம் திகதி திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் பின்னர், ஊடகவியலாளர்கள் வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கக் கூடாதென கிழக்கு மாகாண
ஆளுனர் காரியாலயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெரியாஸ்பத்திரி வளாகத்திற்குள்
ஊடகவியலாளர்கள் பிரவேசிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டமை ஊடக அடக்குமுறைச் செயலாக
கருதப்பட வேண்டுமென ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தடையுத்தரவின் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமை
மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருகோணமலை ஊடகவியலாளர்கள் அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய
பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம், எதிர்க்கட்சிக் காரியாலயம் ஆகியவற்றுக்கு
எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிரான்ஸ் செல்வதற்கு கடவுச்சீட்டில் மோசடி செய்து பயணம் செய்ய முயன்றதாகக் குற்றம்
சாட்டப்பட்ட யாழ்.தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் 20 ஆயிரம் ரூபா
காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்வதற்கு நீர்கொழும்பு நீதிவான்
ஜயகிடி அல்விஸ் அனுமதி வழங்கினார்.

இவர் கடந்த மாதம் 5 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது கடவுச்சீட்டை
பரிசீலித்த குடிவரவு அதிகாரிகள் அதில் மோசடி செய்யப்படிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இவர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!

india

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே தமிழீழ
விடுதலைப் புலிகளும் ஆயுதங்களைக் கீழே வைக்காத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என இந்திய உட்துறை அமைச்சர் பா.
சிதம்பர்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை விளக்கும் பொதுக் கூட்டம் நேற்று
சென்னை மைலாப்பூரில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய அவர், இந்திய அரசாங்கத்தின் முயற்சியின் காரணமாகவே
இலங்கைத் தமிழ் மக்கள் நலன் கருதி 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் புலிகள் காலில் போட்டு மிதித்ததன் காரணமாகவே இன்று
இந்த நிலையேற்பட்டது. இந்த ஒப்பந்தம் அமுலாகியிருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு
அமைதியான,சுபீட்சமான வாழ்வு கிடைத்திருக்கும்.அமிர்தலிங்கம் உட்பட ஏராளமான இலங்கைத்
தமிழ்த் தலைவர்களையும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியையும் படுகொலை செய்தது மாபெரும்
தவறு.

உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும் ஆயுதம் ஏந்திய போராளிகள்
தங்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை பேச்சு நடத்தாது. இது இலங்கைக்கும் பொருந்தும்.

இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல. நம் காலனி ஆதிக்க நாடுமல்ல. அது ஒரு இறையாண்மை மிக்க
தனி சுதந்திர நாடு. எனவே ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என
இலங்கைக்குக் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை.

புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குத் தயாரென்றால் மட்டுமே
இந்தியா இலங்கை அரசை வற்புறுத்தி பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யுமெனவும் அவர்
தெரிவித்தார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க
வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும்
நிலையை உருவாக்கத் தமிழகம் கொந்தளிக்க வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை
நிறுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும்
குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை
சொன்னதில்லை. முல்லைத்தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும்
செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர்
தீக்குளித்து இறந்துள்ளார். தமிழகத்திலும் சிலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.

இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும்.
அந்த நிலையை உருவாக்கத் தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த,
இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர்
பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது.

தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றத் துடிப்பதைப் போல இலங்கைத்
தமிழர்கள் மரணத்தின் பிடியிலிருந்து நம்முடைய கரங்களைப் பற்றிப்பிடிக்கத்
துடிக்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத்
தரப்பினரும் பங்கேற்க வேண்டும்” இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் அழைப்பு
விடுத்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!

2009-10‌ம் ஆ‌‌ண்டி‌ற்கான ‌இடை‌க்கால நி‌தி‌நிலை அ‌றி‌‌க்கையை நி‌தி அமை‌ச்சக‌ர்
பொறு‌ப்பை ஏ‌ற்று‌ள்ள ‌‌‌பிரதம‌ரி‌ன் சா‌ர்பாக அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் சம‌ர்‌ப்‌பி‌‌த்து வரு‌கிறா‌ர்.

இ‌ந்‌திய பொருளாதார‌ வெ‌ற்‌‌றி‌‌யி‌ன் நாயகனாக நமது நா‌ட்டி‌ன் ‌விவசா‌‌யிக‌ள்
‌திக‌ழ்‌‌கி‌ன்றன‌ர் எ‌ன்று கூ‌றி ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை வா‌சி‌க்க துவ‌ங்‌கினா‌ர்
‌பிரணா‌ப் ‌முக‌ர்‌ஜி.

2008-09 ‌நி‌தி ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ‌நி‌தி ப‌ற்றா‌க்குறை 2.7 ‌விழு‌க்காடாக
குறை‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல் இ‌ந்‌‌தியா‌வி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி 7 முதல‌் 8
‌விழு‌க்காடாக இரு‌‌க்கு‌ம்.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல் இ‌ந்‌தியாவ‌ி‌ன் அ‌‌ந்‌நிய முத‌லீ‌ட்டு வள‌ர்‌ச்‌சி அத‌ற்கு
மு‌‌ந்தைய ஆ‌ண்டை ‌விட 39 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌ி‌ய அர‌சி‌ன் வ‌ரி வருவா‌ய் மொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி‌ல் 12.5
‌விழு‌க்காடாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் ராமர்கோயில் கட்டுவோம் என்று மீண்டும் அயோத்தி
பிரச்சனையை எழுப்பியுள்ளார் அத்வானி.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி, இப்போதே தேர்தல்
பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு
அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானி பேசியதாவது:

இந்திய நாட்டின் அரசியல் சூழ்நிலையை அயோத்தி பிரச்சினைதான் மாற்றி அமைத்தது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினால் மட்டுமே, ‘ஜெய் ஸ்ரீராம்’என்ற கோஷத்தை எழுப்புவதில்
அர்த்தம் இருக்கும்.

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டப்படும். இந்த கொள்கையை பாரதிய ஜனதா ஒருபோதும்
மறக்காது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பயங்கரவாதம்
பெருகியுள்ளது. அப்பாவி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறும் பாகிஸ்தானின் வலையில் மத்திய அரசு
சிக்கிவிட கூடாது. மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணை இந்தியாவில் மட்டுமே நடைபெற
வேண்டும். இவ்வாறு அத்வானி பேசினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 1.06 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகி
இருந்தது.

அசாம்- மேகாலயா மாநில எல்லைப்பகுதியை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இரயில்வே பணியாளர் தேர்வுகான வினாத்தாளை வெளியிட்ட 105 பேரை காவல்துறையினர் கைது
செய்தனர்.

அஜ்மீர் ரயில்வே மண்டலத்தில் 131 இரயில் நிலையங்களில் இரயில் நிலைய உதவி அதிகாரிகள் பணி
இடங்கள் காலியாக இருந்தது. இதை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் நேற்று
நடைபெறுவதாக இருந்தது.

மொத்தமுள்ள 201 தேர்வு மையங்களில் சுமார் 76 ஆயிரம் பேர் தேர்வு எழுத தயாராக இருந்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்
திருட்டுத்தனமாக வெளியானதாக தகவல் வெளிதானது.

இதையடுத்து, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிரடிப்படை போலீசார் தீவிர
விசாரணை நடத்தி, 105 பேரை கைது செய்தனர்.

இதில் 84 பேர், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள். இவர்கள் கேள்வித்தாளுடன்
காவல்துறையினரிடம் பிடிபட்டனர். மேலும் 11 பேர் வினாத்தாளை வெளியிட்ட கும்பலை
சேர்ந்தவர்கள்.

எனினும், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சந்தோஷ் சிங் என்பவர் தப்பியோடிவிட்டான்.
அவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

!!!!!!!!!!!!!!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நிலவும் ராணுவப் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க
“ராணுவத்தில் சேருங்கள்; அமெரிக்க குடியுரிமை” பெறுங்கள் என்ற புதிய முழக்கத்தை
அமெரிக்கா துவக்கியுள்ளது. இதன்படி ஹிந்தி, தமிழ் பேசத் தெரிந்த அமெரிக்க வாழ்
இந்தியர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

பச்சை அட்டை விசா பெற்று அமெரிக்காவில் வசிப்பவர்கள் ராணுவத்தில் சேரத் தகுதியானவர்கள்
என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் தற்போது தற்காலிக விசா பெற்று அமெரிக்காவில்
2 ஆண்டுகளாக வசிப்பவர்களும் ராணுவத்தில் பணியாற்றலாம் என அமெரிக்கா அரசு கூறியுள்ளது.
வியட்நாம் போரின் போது இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

இவ்வாறு ராணுவப் பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் வெளிநாட்டவர்களுக்கு 6 மாதங்களில்
அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு காலத்திற்கான இந்த திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு நியூயார்க்கில் விரைவில் துவங்க
உள்ளது. முதற்கட்டமாக 550 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதில் 300
மருத்துவ நிபுணர்களும் அடங்குவர்.

அமெரிக்க ராணுவத்தில் சேரும் அமெரிக்கர்களை விட அதிகக் கல்வித் தகுதி, பல்வேறு
மொழிகளில் புலமை, தொழில் நிபுணத்துவம் பெற்ற தற்காலிக விசா வைத்துள்ள வெளிநாட்டவர்களை
ராணுவத்தில் சேர்க்கத் அந்நாட்டு ராணுவம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மருத்துவ
வசதி, மொழி மாற்றம் செய்து பேசுவது, களப் புலனாய்வு ஆகியவற்றில் நிலவும் ஆள்
பற்றாக்குறையைப் போக்க முடியும் என அமெரிக்க ராணுவம் கருதுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம்
இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்டதை , அந்நாட்டு அரசு அண்மையில்
ஒப்புக்கொண்டதையடுத்து, தாக்குதலில் தொடர்புடைய 6 தீவிரவாதிகளை பாகிஸ்தான் கைது
செய்துள்ளது. இந்நிலையில், மும்பை சிறையில் உள்ள தீவிரவாதி அஜ்மலிடம் விசாரணை
நடத்துவதற்காக, அவனை தங்களிட்ம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாக
செய்திகள் வெளியாகின. இதனை மறுத்த பிரணாப், அஜ்மலை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம்
இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், அப்படி கோரிக்கை
விடுத்தால், அஜ்மலை அந்நாட்டிடம் ஒப்படைப்பது குறித்து இந்தியா தனது கருத்தை வெளியிடும்
என்றும் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதில் ரஷியாவை பின்தள்ளிவிட்டு இஸ்ரேல் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக
இஸ்ரேல் ராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி “தி ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அத்தோடு இஸ்ரேல் தளவாடங்களையும், பயங்கரவாதிகளுக்கு எதிராகப்
போரிடுவதில் இஸ்ரேலின் அனுபவத்தையும் பெற இந்தியா விரும்புகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக ரஷியாதான் இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை அதிக அளவில் விற்பனை செய்து வந்துள்ளது. ஆண்டுக்கு 87 கோடி டாலருக்கு ஆயுதங்களை ரஷியா வழங்கி வந்தது.

ஆனால் அண்மையில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி இஸ்ரேல் ரஷியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் எதிரிகளின் விமானங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து அழிக்கும் ரேடார்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. மும்பைத் தாக்குதலை அடுத்து கடல் வழி மற்றும் வான் வழித் தாக்குதலைத் தடுக்க ரேடார் அமைப்புகளை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு இஸ்ரேலின் “ஏரோஸ்டாட்’ ரேடார்களை வாங்குகிறது. இதுபோன்று இந்திய ராணுவத்தின் தேவைக்கு ஏற்ப இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!

world

அமெரிக்க அரசின் உயர் பதவிகளில் காலியாக உள்ள அரசியல் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பணியிடங்களில் புதிதாக ஆள்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் பராக் ஒபாமா தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் அமெரிக்க நிறுவனங்களைத் தடுக்க முடியாத நிலையில், அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அரசியல் சார்ந்த இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே 3.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் இந்தப் பணியிடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

“அமெரிக்க அரசுத் துறைகளில் அரசியல் சார்ந்த உயர் பணியிடங்களில் பல்லாயிரக்கணக்கானோரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே பலரை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது விண்ணப்பங்கள் தீவிரமாகப்
பரிசீலிக்கப்பட்டு, நியமன ஆணைகள் வழங்குவது குறித்து அடுத்த சில மாதங்களில் முடிவு செய்யப்படும்’ என பணி நியமனத்துக்கான அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தப் பணியிடங்களில் நியமிக்கப்படுவோர் அதிபரின் விருப்பத்துக்கு ஏற்பவே பணியில் நீடிக்க முடியும். எனவே, இந்தப் பணியிடங்கள் தாற்காலிகமானவையே; நிரந்தரமானவை அல்ல’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.usajobs.gov மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தாற்காலிக அரசியல் சார்ந்த பணியிடங்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அரசுத் துறைகளில் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்கள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

அரசியல் சார்ந்த பணியிடங்களுக்கான நியமனங்களுக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மட்டுமல்லாது, அமெரிக்க அதிபரின் ஊழியர்கள் பிரிவு அலுவலகத்துக்கு அஞ்சல் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இணையதளத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட சில முக்கியமான பணியிடங்களுக்கு கூடுதல் தகவல்களும் கோரப்படும் என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பணியிடங்களுக்கு இனம், மதம், பாலியல் பாகுபாடு, நிறம், வயது உள்ளிட்ட எந்தப் பாரபட்சமும் இன்றி தகுதி அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 6 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஜகீர் ரெஹ்மான் லக்வி, அந்த அமைப்பின் தொலைத்தொடர்பு நிபுணர் ஜரார் ஷா உள்பட 6 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

அவர்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் விசாரணைக்காக “எப்ஐஏ’ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தனது நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதை பாகிஸ்தான் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் இதை வெளிப்படையாக அறிவித்தார்.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் விசாரணைக்காக பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை
மேற்கொள்ளப்படும். பிடிபட்டவர்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விவரத்தை அப்போது அவர் வெளியிடவில்லை.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக ஒருசில சதித்திட்டங்கள் பாகிஸ்தானில் தீட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

லக்வி, ஜரார் ஷா இருவரும் கடந்த டிசம்பரில் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள லக்ஷர் இ தொய்பா முகாம்களில் சோதனை செய்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர்
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை ரகசியமாக நடத்தப்படும் என்று தெரிகிறது.

மும்பைத் தாக்குதல் விசாரணையில் முதலில் பிடி கொடுக்காமல் பேசி வந்த பாகிஸ்தான் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!

வடமேற்கு பாகிஸ்தானில் இருக்கின்ற ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு
எதிராக போரிட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை
அறிவித்து அமைதி ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படலாம் என கூறியுள்ளனர்.

அதிகாரிகளுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் அனுகூலமாக இருந்ததாக
தீவிரவாதிகள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஐந்து மாத காலத்திற்கு முன்பு கடத்திய சீன பொறியாளர் ஒருவரை நல்லெண்ண
அடிப்படையில் விடுவித்துள்ளதாக தீவிரவாதிகள் அறிவித்த பின்னர் இந்த செய்தி
வெளியாகியுள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள், இந்த
பகுதியில் கடும் மோதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!

அமெரிக்க மற்றும் ஆப்கான் அரசுகளுக்கு இடையில் சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டுள்ள போதிலும், அதிபர் ஒபாமாவினால் உத்தரவிடப்பட்டுள்ள இப்பிராந்திய கொள்கை
சீராய்வுக்கு தாங்கள் கருத்துக்களை முன் வைப்போம் என ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.

தங்களுடைய அரசின் கருத்துக்கள் கேட்கப்படுவதற்கு தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும், தான்
அமெரிக்காவுக்கு ஒரு குழுவை அனுப்பி வைக்கப்போவதாகவும் ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்
தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் புதிய தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக் உடன் பேச்சுக்களை நடத்திய பின்னர்
ஆப்கானிஸ்தான் அதிபர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

சமீபத்தில்தான் முறைகேடுகளை தடுப்பதில், ஆப்கானிஸ்தான் அரசின் முயற்சி குறித்து
அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டு, ஆப்கான் அரசு இன்னும் நன்றாக செயற்பட
வேண்டும் என கூறியிருந்தனர்.

!!!!!!!!!!!!!!!!!!!

காசாவில் கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகையானது கிட்டதட்ட நாற்பது சதவிகிதம்
அதிகரித்துள்ளது என காசாவில் வெளியான கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது
உலகில் மிகவும் அதிகமான அதிகரிப்பு விகிதங்களில் ஒன்று.

2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்ப்படி காசாவின் மக்கள் தொகையானது 14
லட்சத்தை தாண்டி விட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டுக்கு கிட்டதட்ட மூன்றரை
சதவிகிதம் உள்ளது.

இதே ரீதியில் வளர்ச்சி இருந்தால், அடுத்த இருபதாண்டுகளில் அங்கு மக்கள் தொகை
இரட்டிப்பாகிவிடும் என கணக்கீடப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!

Sunday, 15 February 2009

Test Match Series

West Indies: Yet to bat
England: 301-3
Close
scorecard

NatWest International Twenty20 Match

Australia: 150-7 ( 20.0 overs )
New Zealand: 149-5 ( 20.0 overs )
Australia beat New Zealand by 1 run

1euro =145.39sl/62.09in

1us $ = 114.10sl/48.71in

1swiss fr= 97.56sl /41.67in

1uk pound =161.87sl /89.13in

Leave a Reply

Your email address will not be published.