ஒபாமா தந்த பெயில் அவுட் – இந்தியர்களுக்கு நாக் அவுட்!

வாஷிங்டன்: இனி அடுத்த இரு ஆண்டுகளுக்கு எச்-1பி விசாவில் யாரையும் வேலைக்கு அமர்த்த மாட்டோம், என அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் அறிவித்துவிட்டன.


அமெரிக்க வேலை, டாலர் சம்பள கனவுகளோடு தூதரகங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் இந்திய ஐஐடி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிது.

பொருளாதார பெருமந்தத்தால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 1 கோடிபேர் அமெரிக்காவில் மட்டும் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

30 வங்கிகள் இழுத்து மூடப்பட்டன… அல்லது திவாலாகிவிட்டன. பல நிறுவனங்கள் மூடுவிழாவுக்குத் தயாராக உள்ளன. தாக்குப் பிடிக்கக் கூடிய நிறுவனங்களோ, முடிந்தவரை ஆட்களைக் குறைத்து சிக்கனமாகமாக ஷோவை நடத்திக் கொண்டுள்ளன.

இந்த சூழலில், அமெரிக்கர்களுக்கு மீண்டும் வேலை தர ஒபாமா அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி, வீழ்ச்சியில் தவிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் 787 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை அறிவித்துள்ளது, ஒரு பெரும் நிபந்தனையுடன்.

இந்த உதவியைப் பெறும் நிறுவனங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும், குறிப்பிட்ட காலகட்டம் வரை எச்- 1பி விசாவில் வெளிநாட்டவரை பணி நியமனம் செய்யக்கூடாது. அமெரிக்க செனட்டிலும் இந்த நிபந்தனையுடன்தான் பெயில் அவுட் தொகைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைக்கு முழுமையாக ஒப்புக்கொண்டு, நிதியைப் பெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, இனி எச் 1 பி விசாவில் யாரையும் பணியில் நியமிக்க மாட்டோம் என்றும், அமெரிக்கர்கள் மட்டுமே அனைத்துப் பிரிவுகளுக்கும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளன.

இந்த எச்1பி விசாவில் அதிகம் பணி நியமனம் பெறுவோர் இந்தியர்களாகவே இருந்தனர்.

இனி அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியர்களை புதிதாக வேலைக்கு எடுக்கமாட்டோம் என்பதை பொட்டிலடித்த மாதிரி சொல்லிவிட்டது அமெரிக்க நிறுவனங்கள்.

ஒருவழியாக, ஒபாமாவின் ’40 லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டுக்குள் வேலை’ என்ற திட்டத்தின் முதல்படி வெற்றிகரமாக தாண்டப்பட்டுவிட்டது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.