ஹவுரா சிறப்பு ரயில் வந்தது : கண்ணீர் மல்க வரவேற்பு

சென்னை : ஒரிசாவில் தடம் புரண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக அங்கிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில், 700 பயணிகளுடன் நேற்று காலை சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. விபத்திலிருந்து அதிருஷ்டவசமாக உயிர் தப்பிவந்த பயணிகளை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ஹவுராவிலிருந்து கடந்த 14ம் தேதி சென்னை வந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் ரோடு அருகே தடம் புரண்டது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இந்த ரயிலில் பயணம் செய்து அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் 700 பேர் நேற்று காலை சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். இச்சிறப்பு ரயிலில், காயமடைந்த பயணிகள் சிலரும் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆறு டாக்டர்கள், 12 நர்சுகள் மற்றும் உதவியாளர்கள் என 42 பேர் கொண்ட குழுவினர் தயாராக இருந்தனர். ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயிலில் வரும் பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்க ஆறு மாநகர போக்குவரத்து பஸ்களும், 20 கால் டாக்சிகளும், ஆறு ரயில்வே வேன்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் ஓய்வு எடுக்க ஓய்வறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பயணிகளின் லக்கேஜ்களை நிலையத்திலிருந்து வெளியில் எடுத்து வந்து கொடுத்து உதவி செய்வதற்காக ரயில் வந்து நிற்கும் பிளாட்பாரத்தில் சத்ய சாய் சேவா அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் மற்றும் ரயில்வே போர்ட்டர்கள் 60 டிராலிகளுடன் காத்திருந்தனர்.

ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும் பயணிகளின் உறவினர்கள் ஓடிவந்து பயணிகளை கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து வரவேற்றனர். 23 பயணிகள், முதல் உதவி சிகிச்சை பெற்று சென்றனர். சிறிய காயத்துடன் வந்திருந்த 10 பேர் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். கை மற்றும் கால்களில் காயம்பட்டிருந்த நான்கு பயணிகள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததால், அவர்கள் அப்பல்லோ மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து மாநகர போக்குவரத்து பஸ்களிலும், ரயில்வே வேன்கள் மற்றும் கால் டாக்சிகளில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதை சீரமைப்பு: இதனிடையே ஜாஜ்பூர் பகுதியில் பாதிக்கப்பட்ட ரயில் பாதை 36 மணி நேரத்தில் சீர் செய்யப்பட்டது. இதனால் இவ்வழியே வழக்கமான போக்குவரத்து தொடரும் என்று கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவிரைவாக பாதை சீரமைப்பு நடைபெற 500 ரயில்வே ஊழியர்களும் தனியார் நிறுவன தலைமை அதிகாரிகளும் ஒத்துழைத்தனர் என்றும் கூறப்பட்டது

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.