சூப்பர் மார்க்கெட்டில் பெண் விற்பனையாளர் கொலை : பட்டப் பகலில் வாலிபர் வெறிச்செயல்

சென்னை : பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த மர்ம நபர், கடைக்குள்ளேயே பெண் விற்பனையாளரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் ராயபுரத்தில் நடந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் ஞானசேகர். இவரது மகள் ஆனந்தி (23); ராயபுரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை ஆனந்தியும், சில பெண் விற்பனையாளர்கள் மட்டும் பணியில் இருந்தனர். அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வந்தார். “இங்கே ஆனந்தி என்பது யார்,’ என கேட்டார். உடனே அங்கிருந்த ஆனந்தி,”நான்தான்,’ என்றார். மர்ம நபர் திடீரென ஆனந்தியை தலைமுடியைப் பிடித்து கடையின் மற்றொரு பகுதிக்கு இழுத்துச் சென்றார். வெறிப்பிடித்தவர் போல் கைகளால் சரமாரியாக தாக்கினார். தாக்குதலை சமாளிக்க முடியாத ஆனந்தி சுருண்டு விழுந்ததும் தப்பி ஒடிவிட்டார். பீதியில் மிரண்டு போன பிற விற்பனையாளர்களால் இதை தடுக்க முடியவில்லை. சுருண்டு விழுந்த ஆனந்தியின் காதின் அருகே ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகே உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்தி இறந்து விட்டதாக கூறினர். மார்க்கெட்டிற்கு வந்த மர்ம வாலிபர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன் ஆனந்தியை பெண் பார்க்க சிலர் வந்துவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் தாக்குதல் நடந்துள்ளதால் காதல் விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. துணை கமிஷனர் சம்பத்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து ராயபுரம் உதவி கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் மதியழகன் கொண்ட தனிப்படையினர் தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் விற்பனைக் கடைக்குள் புகுந்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.