இலங்கை போர்க்களத்தில் பிரபாகரன் மகன் சார்லஸ் புதிய தலைமை:: அபாய திட்டங்கள் தயார்

கொழும்பு: புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமையில் முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகவும், பிரபாகரன் வன்னி பகுதியில் தங்கியிருப்பதாகவும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த கடற்புலிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தைப் பின்வாங்கச் செய்யும் வகையிலான பல அபாயகரமான தாக்குதல் திட்டங்களையும் புலிகள் வகுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் முல்லைத் தீவை நோக்கி முன்னேறிய ராணுவத்தினரைத் தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கடற்புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த சங்கர், தமிழ் அலை ஆகியோர் இரணமடு அணையை தகர்ப்பதற்காக அனுப்பப்பட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

இருவரும் இலங்கை ராணுவத்திடம் கடந்த ஜனவரியில் சரணடைந்தனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் தெரியவந்ததாக, “சண்டே அப்சர்வர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சரண் அடைந்த கடற்புலிகள் இருவரும் கூறியதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத் தீவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறி வருவதை தடுக்க விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரணமடு அணையை வெடி வைத்து தகர்க்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அணையை தகர்ப்பதற்கான திட்டத்தை புலிகளின் கடற்பிரிவுத் தலைவர் சூசையும், புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணியும் வகுத்தனர்.அணையை தகர்ப்பது எப்படி என்பது குறித்து எங்களுக்கு கம்ப்யூட்டர் மூலமாக சார்லஸ் விளக்கினார். இதற்காக எங்களுக்கு தண்ணீருக்குள் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களுடன் சேர்த்து மேலும் 10 பேரும் பயிற்சி பெற்றனர். தற்கொலைப் படை தாக்குதலுக்குக் கிளம்புவதற்கு முன், பிரபாகரன் எங்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தில் மட்டன் உணவு பரிமாறப்பட்டது.

அணையை தகர்க்கும்போது அதிக பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அணையை தகர்ப்பதன் மூலம் 5,000 ராணுவ வீரர்கள் இறக்க வேண்டும் என சார்லசும், சூசையும் விருப்பம் தெரிவித்தனர். எங்களிடம் சாட்டிலைட் போன், நீச்சல் உடைகள் மற்றும் வெடிகுண்டுகள் தரப்பட்டன.முல்லைத் தீவில் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகள் படைக்கு, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தான், தலைமை ஏற்றுள்ளார். சார்லசுடன் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான பானு, லட்சுமண் ஆகியோரும் புலிகளுக்கான போர் யுக்தியை வகுத்துக் கொடுக்கின்றனர்.

இலங்கை ராணுவத்தை தோல்வி அடையச் செய்யும் வகையில், பல அபாயகரமான திட்டங்களை புலிகள் வகுத்துள்ளனர்.பிரபாகரன், வன்னி பகுதியில் தங்கியுள்ளார். ராணுவம் அவரைப் பிடிக்கும் வரை அப்பாவி மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுவர். அப்பாவி இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலைப் படையினராக மாற்றி வருகின்றனர். பிரபாகரன் தனது மனைவியையும், இளைய மகன் பாலச்சந்திரனையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் எங்கு உள்ளனர் என உறுதியாக தெரியவில்லை.இவ்வாறு கடற்புலிகள் கூறியதாக, “சண்டே அப்சர்வர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது சண்டையை தலைமை ஏற்று நடத்துவதாகக் கூறப்படும் சார்லஸ் அந் தோணி, அயர்லாந்தில் ஏரோநாட்டிகல் பட்டப் படிப்பு படித்தவர். புலிகளின் வான்படை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சார்லசும் ஒருவர் என நம்பப்படுகிறது. புலிகள் அமைப்பின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் அவர் தலைவராக உள்ளார்.இவ்வாறு அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.