‘ராஜபக்சே நாசாமாய் போவான்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்ட “நக்கீரன்” ஆசிரியர் கோபாலுக்கு இலங்கை தூதர் அம்சா மிரட்டல் கடிதம்

ராஜபக்சே நாசாமாய் போவான்!’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவரது புகழுக்கு களங்கம் உண்டாக்குவதாக உள்ளதால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், என தெரிவித்து, முன்னணி வார இதழான நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதர் அம்சா மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.


‘ராஜபக்சே நாசாமாய் போவான்!’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவரது புகழுக்கு களங்கம் உண்டாக்குவதாக உள்ளதால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார் அம்சா.

இதற்கு நக்கீரன் கோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத் தலைநகரில், ஒரு நாட்டின் துணைத் தூதராக மட்டுமே உள்ள ஒருவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு கடிதம் எழுதலாம்? என கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தக் காரணம் கொண்டும் ராஜபக்சேவிடம் மன்னிப்பு கேட்க முடியாதென்றும், இந்த வழக்கை சந்திக்க நக்கீரன் தயார் என்றும் கூறியுள்ள கோபால், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கை மற்றும் ராஜபக்சேவின் இனவெறியை பகிரங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ளவதாவது:

கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை இராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சே.

அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.நா.சபை என அனைத்துத் தரப்பிலிருந்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டாலும் அத்தனையையும் புறக்கணித்து விட்டு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் தாய்த் தமிழகத்தினர்.

வரலாற்று வழியாகவும், புவியியல் ரீதியாகவும் தங்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காக தாய்த்தமிழகத்தினரால் செய்ய முடிந்ததெல்லாம் ஆதரவுக்குரல் எழுப்புவது மட்டும்தான். அந்தக் குரலைப் பதிவுசெய்வது பத்திரிகைகளின் தார்மீக கடமை.

தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் நக்கீரன் அந்தக் கடமையிலிருந்து இம்மியளவும் விலகாமல் தனது பணியைச் செய்துவருகிறது. அதன் சிறு பகுதிதான் பெப்ரவரி 11 -2009 தேதியிட்ட இதழின் அட்டையில் இடம்பெற்றிருந்த, “ராஜபக்சே நாசமா போவான்-சபிக்கும் தமிழகம்’ என்ற செய்திக் கட்டுரை.

சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழக மக்கள் வெளிப்படுத்திய அடிமனதின் குரல்தான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.

ராஜபக்சே தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ள இன்னும் பல தீவிரமான கருத்துகளை பிரசுரிப்புத்தன்மை கருதித் தவிர்த்திருந்தோம். ராஜபக்சேவை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதன் அடையாளமாக அட்டைப்படமும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஜனநாயக சோஷலிச ஸ்ரீலங்கா குடியரசின் துணை உயர் ஸ்தானிகர் பி.எம். அம்சா நமது நக்கீரனுக்கு ஓர் ஓலை அனுப்பியிருக்கிறார்.

பெப்ரவரி 11 தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், “அதிமேதகு ராஜபக்சே அவர்களை தரக்குறைவாக உருவகப்படுத்தி பிரசுரித்ததன் மூலம் தங்களுடைய இதழ் இலங்கை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் வகிக்கும் உயர் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது’ என தெரிவித்திருப்பதுடன், “இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இவ் விஷயத்தை அணுகப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான அம்சா, இந்திய பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருக்கும் மிரட்டலாகவே இந்தக் கடிதம் அமைந்துள்ளது.

இரு நாடுகளின் நட்புறவுக்கான பணியில் ஈடுபடவேண்டிய துணைத் தூதர், தனது அதிகார வரம்பை மீறி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதும் மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிகாரத்தின் மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணிந்ததில்லை என்பதே அதன் 21 ஆண்டுகால வரலாறு.

துணை தூதரின் மிரட்டல் எமக்கு கால்தூசு. சட்டரீதியான நடவடிக்கை என்கிறாரே, எங்கே வழக்குத் தொடரப் போகிறார்? உள்ளூர் நீதிமன்றத்திலா? உலக நீதிமன்றத்திலா? எங்கே இருந்தாலும் ‘வழக்கே வா’ என வரவேற்கிறது நக்கீரன்.

போரை நிறுத்தச் சொன்ன ஒரே பாவத்திற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபேண்டையும் விடுதலைப்புலிகள் போல சித்தரித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததே, அது அவர்களின் பதவிக்கு செய்யப்பட்ட மரியாதையா? அவமரியாதையா? அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த சிங்கள அரசை எந்த நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுவது? எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் கழுத்தில் கபால மாலை அணிவிக்காமல் கரன்சி மாலையா அணிவிப்பார்கள் தமிழ் மக்கள்! அவர்களின் உணர்வைத்தான் நக்கீரன் வெளிப்படுத்தியிருக்கிறது.

நாங்கள் வெளியிட்ட செய்தியும் அட்டைப் படமும் ராஜபக்சேவின் பதவிக்கு இழுக்கு என நினைத்தால் ராஜபக்சேவின் அரசாங்கம் வழக்குத் தொடுக்கட்டும். எதிர் கொள்கிறோம். தூதருக்கு ஏன் இந்த மிரட்டல் வேலை? இதே பாணியில் அவர் யாரை, யாரையெல்லாம் மிரட்டியிருக்கிறார் என்பதை அறிவோம். இப்போது நக்கீரனை நோக்கிப் பாய்ந்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தனது வரம்புக்கு மீறி என்னென்ன செயல்பாடுகளை செய்து வருகிறது, என்னென்ன மாதிரியான இரகசிய வேலைகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதையெல்லாம் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலப்படுத்துவதற்கு இந்த வழக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே நக்கீரன் கருதுகிறது.

தமிழினத்தைக் கொன்றொழிக்கும் இலங்கை அதிபரை பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார் என அறைகூவல் விடுக்கிறோம்.

தூதரா, ஒற்றரா என இனம் பிரிக்க முடியாதவகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கை துணை தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் அம்சாவின் நடவடிக் கைகள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இருப்பதை அரசியல் தலைவர்கள், பொதுநல அமைப் பினர், மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மை யான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே நக்கீரனின் வேண்டுகோளாகும்.

Source & Thanks : .tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.