அமெரிக்க தூதரகத்திடம் சனியன்று மனு கையளிப்பு; சிறிலங்கா துணை தூதரகத்தினை அகற்ற மார்ச்சில் போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

தமிழக மக்களை ஒன்று திரட்டி அமெரிக்க தூதரகத்தில் நம் உணர்வை காட்ட மனு கொடுக்க உள்ளேன். நமக்கு உதவாத சிங்கள தூதரகத்தினை அகற்றக்கோரி எதிர்வரும் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் விஜயகாந்த் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினை தொடர்பாக தற்போது நான் பேசவில்லையே, ஒருவேளை காங்கிரசுடன் கூட்டணி வைக்க உள்ளேனோ, அதனால் தான் பேசவில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

நான் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை. அப்படி வைத்தால் அதனை முறையாக மக்களிடம் அறிவிப்பேன்.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் நான் இலங்கை பிரச்சினைக்காக உண்ணாநிலை, பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன்.

இலங்கை தமிழர்களுக்காக ஏராளமாக செய்துள்ளேன். ஆனால், தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் பேசி இலங்கை பிரச்சினையில் மக்களை ஏமாற்றி கட்சியை வளர்க்கின்றனர்.

உண்மையில் தமிழ் இனம் அழிவதில் யாருக்கும் அக்கறை இல்லை. அதுதான் எனக்கு வருத்தம். இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் சரியான வழி. இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் 2 கோடி தமிழர்களுக்கு பதில் தற்போது 30 லட்சம் பேரே உள்ளனர். இலங்கை பிரச்சினைக்கு ஒரே நிரந்தர தீர்வு ஆறரை கோடி தமிழக மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் உள்ளனர். தமிழன் ஒருவனுக்கு பிரச்சினை என்றால் தமிழ்நாட்டுக்காரர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்குகின்றான்.

எங்கு போனாலும் தமிழன் அடி வாங்குகின்றான். தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் யாரும் குரல் கொடுப்பதில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆட்சியை காப்பாற்றத்தான் கூட்டணி வைக்கின்றன.

தமிழர்களை காப்பதற்காக அல்ல. ஆறரை கோடி தமிழக மக்களும் தேர்தலை புறக்கணித்தால் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும்.

சாதாரண உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒரு வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்தால் ஒட்டு மொத்த அரசு அதிகாரிகளும் அங்கு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணித்தால் உலக நாடுகள் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும்.

உலக தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் தந்தி, குறுந்தகவல், தொலைநகல் அனுப்பவேண்டும். இதனை காணும் அவர்கள் உடனடியாக போரை நிறுத்த குரல் கொடுப்பார்கள். இதற்கான முகவரியை 2 நாட்களில் விளம்பரம் செய்கின்றேன்.

ஒபாமாவிற்கு ஏன் தந்தி கொடுக்கவேண்டும் என்றால் மும்பாய் தாக்குதல் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்று கூறிவந்த பாகிஸ்தான், அமெரிக்க அரச தலைவர் ஒபாமா கண்டித்தவுடன் உடனடியாக ஒத்துக்கொண்டது. எனவே ஒபாமாவிற்கு கோடிக்கணக்கில் தந்தி, குறுந்தகல், தொலைநகல் அனுப்புங்கள்.

சென்னையில் எதிர்வரும் சனிக்கிழமை (21.02.09) எனது கட்சியினர், தமிழக மக்களை ஒன்று திரட்டி அமெரிக்க தூதரகத்தில் நம் உணர்வை காட்ட மனு கொடுக்க உள்ளேன்.

நமக்கு உதவாத சிங்கள தூதரகம் தேவையில்லாததால் அதனை உடனடியாக அகற்றக்கோரி எதிர்வரும் மார்ச் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன். அந்த தூதரகத்தை அங்கு இருக்கவிட மாட்டேன் என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.