ஈழத்தில் போரை நிறுத்த கோரி இந்திய நாடாளுமன்றம் முன்பாக மறியல்: சென்னையில் இருந்து 200 பேர் கொண்ட குழுவினர் பயணம்

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி “ஈழத் தமிழர் தோழமைக் குரல்” அமைப்பின் சார்பில் சுமார் 200 பேர் கொண்ட குழுவினர் தலைநகர் புதுடில்லி சென்றனர். இவர்கள் நாளை இந்திய நாடாளுமன்றம் முன்பாக மறியல் செய்யவுள்ளனர்.


“ஈழத் தமிழர் தோழமைக் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:40 நிமிடமளவில் எழும்பூர் தொடருந்து நிலையத்தில் இருந்து “சம்மர் கிராந்தி” விரைவு தொடருந்து மூலம் புதுடில்லி புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பாக “ஈழத் தமிழர் தோழமைக் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.செயப்பிரகாசம் கூறியுள்ளதாவது:

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசு சிறிலங்காவுக்கு செய்து வரும் உதவிகளை உடனடியாக நிறுத்த கோரியும் நாளை நாடாளுமன்றம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்போகின்றோம்.

இப்போராட்டத்தில் மாணவர்கள், எழுத்தாளர்கள், பெண் விடுதலை அமைப்பினர் போன்றவர்கள் உட்பட 200 பேர் கலந்து கொள்கின்றோம். தமிழ் நாட்டில் இதுவரை நடந்த எந்த போராட்டமும் மத்திய அரசுக்கு கேட்கவில்லை. எனவே, நாங்கள் நேரடியாக சென்று நாடாளுமன்றம் முன்பாக மறியல் செய்ய போகின்றோம் என்றார்.

இவர்களுடன், கவிஞர் தாமரை, பேராசிரியர் சரஸ்வதி, தியாகு, கவிஞர் இன்குலாப் ஆகியோர் உடன் சென்றனர். நடிகர்கள் மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா ஆகியோர் வழியனுப்பி வைத்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.