ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார் எனவும் அறிவிப்பு

ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஈழத்தில் நடைபெற்று வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா,

“இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.

தொடர்ந்து, ஹிந்தியில் உரையாற்றிய சென்னை மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டும் எம்.பி.பி.எஸ் மாணவர் குசன் சிங் குப்தா,

“மருத்துவப் படிப்பு என்பது உயிர் காக்கும் உன்னத தொழிலுக்கானது. ஆனால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். நாள்தோறும் காயமடைந்தும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அங்கு இரத்தம் சிந்தப்படுகிறது. இதை நாங்கள் இன ரீதியாக வேறுபடுத்த விரும்பவில்லை. மனிதர்களை கொல்லும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.

இப்போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தெய்வநாயகம், இரவீந்திரநாத் மற்றும் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஸ்குமார், சதீஸ்குமார் உள்ளிட்ட 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.