சாலை கடற்கரையில் சிறிலங்கா படையினரின் புதிய ஏவுகணை தளங்கள்: “லக்பிம” வார ஏடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளதாக “லக்பிம” வார ஏடு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக “லக்பிம” ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், நடவடிக்கை படையணி – 04 மற்றும் நடவடிக்கை படையணி – 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஏ-36 நெடுஞ்சாலையின் வடபகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்புக்கு தென்புறம் உள்ள பாதுகாப்பு படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம். அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.