இன்போசிஸ்: ஊழியர்களின் பயிற்சிக் காலம் நீட்டிப்பு – ஆளெடுப்பைத் தவிர்க்கும் உத்தி

மும்பை: ஆள் எடுப்பைத் தவிர்க்கும் வகையில், ஊழியர்களுக்கான பயிற்சிக் காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக இன்போசிஸ் விரிவுபடுத்தியுள்ளது.


உலகளாவிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு உத்தியை கையாண்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் ஒரு உத்தியை கையாள தொடங்கியுள்ளது. ஆளெடுப்பைத் தவிர்க்கும் வகையில், ஊழியர்களுக்கான பயிற்சிக்காலத்தை அது நீடித்துள்ளது.

‘பென்ச்’சில் இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சிக்காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக அது நீட்டித்துள்ளது.

பொருளாதார சீர்குலைவு மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக இதை இன்போசிஸ் மேற்கொண்டுள்ளதாம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறுகையில், இந்த நேரத்தில் நமக்குத் தேவை நல்ல பயிற்சிதான். எனவேதான் பயிற்சிக்காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக உயர்த்தியுள்ளோம்.

இன்போசிஸ் நிறுவனத்திடம் 2 பில்லியன் டாலர் நிதி இருப்பு உள்ளது. இதை வைத்துக் கொண்டு, எந்த வருவாயும் வராவிட்டாலும் கூட இன்னும் ஒரு வருடத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் வருவாயே இல்லை என்ற நிலை கண்டிப்பாக வராது.

அமெரிக்கவில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி, 1929ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவுக்கு சமமானதாகும்.

1929ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் எனவும் நான் கருதுகிறேன்.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்றார் நாராயண மூர்த்தி.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.