பாகிஸ்தானை கைப்பற்ற முயலும் தலிபான்- சர்தாரி

நியூயார்க்: பாகிஸ்தானின் பல பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது தலிபான். ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் கைப்பற்றவும் அது முயலுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.


தீவிரவாதிகளை எதிர்த்து பாகிஸ்தான் நடத்தி வரும் போராட்டம், பாகிஸ்தானையும் காப்பாற்றுவதற்காக நடந்து வரும் போராட்டமே என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் சானலுக்கு சர்தாரி அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சர்தாரி கூறுகையில், பாகிஸ்தானின் பல பகுதிகளில் தலிபான் ஆக்கிரமித்துள்ளது. அவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை.

இதை நாங்கள் முன்பு மறுத்து வந்தோம். ஆனால் அதுதான் உண்மை. பாகிஸ்தானின் நிலப்பரப்பில் பல பகுதிகள் தலிபான் வசம்தான் உள்ளது.

எங்களது படை பலத்தை நாங்கள் அதிகரிக்கவில்லை. எங்களிடம் பலவீனங்கள் உள்ளன. அந்த பலவீனத்தை அவர்கள் (தலிபான் தீவிரவாதிகள்) சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக 1 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் போரிட்டு வருகின்றனர். அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் நடத்தி வரும் மறைமுகப் போர் என்று பாகிஸ்தான் மக்களில் பலர் நினைக்கின்றனர்.

ஆனால் நாங்கள் யாருக்காகவும் போரிடவில்லை. உண்மையில் எங்களது நாட்டைக் காப்பாற்ற தலிபான்கள் கையில் போய் விடாமல் காக்கும் வகையிலும்தான் நாங்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் எடுத்துக் கொள்ள தலிபான்கள் முயலுகிறார்கள். எனவே பாகிஸ்தானையும் காப்பாற்றவே இந்தப் போர் நடக்கிறது. யாருடைய நலனுக்காகவும் நாங்கள் தீவிரவாதிகளுடன் சண்டை போடவில்லை. எங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இந்தப் போர்.

எனக்கு ராணுவமும், உளவுத்துறையும் (ஐ.எஸ்.ஐ) முழு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறுவது தவறானது.

அப்படி இருந்தால், இன்னேரம் இஸ்லாமாபாத் தீவிரவாதிகளின் கையில் இருந்திருக்கும். ராணுவம் முறையாக செயல்பட்டிருக்காவிட்டால் இன்னேரம் அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மரியாட் ஹோட்டலை முன்பே அவர்கள் தகர்த்திருப்பார்கள்.

முன்பு எங்களை உள்ளேயே வந்து அவர்கள் தாக்கியுள்ளனர். எங்களைச் சுற்றி வளைத்திருப்பார்கள். எனவே ராணுவம் அரசுக்கு ஆதரவாக இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார் சர்தாரி.

தலிபானை வளர்த்துவிட்டதே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுக்கு எதிரானப் போர் என்ற பெயரில் அவர்களுக்கு பெருமளவு ஆயுத உதவி தந்து வளர்த்தது அமெரிக்கா என்பதும் நினைவுகூறத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.