சென்னை-சாப்ட்வேர் என்ஜீனியர் தீக்குளித்து தற்கொலை

சென்னை: சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த நான்கு நாட்களாக வேலைக்குப் போகாமல் இருந்ததால், அலுவலகத்திலோ அல்லது வேலையிலோ பிரச்சினை ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் தினேஷ் (23). சாப்ட்வேர் என்ஜினீயர். திருமணமாகவில்லை. சென்னை அம்பத்தூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் இருக்கும் மேன்ஷனில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று மாலை 6 மணிக்கு தான் தங்கியிருந்த அறையை பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துவிட்டார்.

வலி தாங்காமல் சத்தம் போட்டபடி அறைக்குள்ளேயே ஓடி சிறிது நேரத்தில் குளியலறையில் கருகி பிணமானார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வடபழனி போலீஸார் விரைந்து வந்து திணேஷின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் இலங்கைப் பிரச்சினைக்காக திணேஷ் தீக்குளித்து விட்டதாக தகவல் பரவியது. பின்னர் இன்று காதலர் தினம் என்பதால், காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என பேச்சு எழுந்தது.

இருப்பினும் திணேஷ் எந்தக் கடிதத்தையும் எழுதி வைக்காததால், அவரது மரணம் மர்மமாக இருக்கிறது.

திணேஷுடன் தங்கியிருந்த நண்பரிடமும், அவரது சித்தப்பாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தினேஷ் கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அறையிலே தங்கியிருந்தாகவும், முகவாட்டத்துடன் காணப்பட்டதாகவும் கூறினார்கள்.

மேலும் அடிக்கடி பல்வேறு நிறுவனங்களில் மாறி மாறி சேர்ந்துள்ளார். அலுவலகத்திலோ அல்லது வேலையிலோ ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.