இளம்பெண் வெட்டி கொலை : இரு ஒரிசா இளைஞர்கள் கைது

திருவாடானை : திருவாடானை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் நிர்வாணக் கோலத்தில் கிடந்தார். இது தொடர்பாக, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வத்தாபட்டியை சேர்ந்தவர் லதா (27). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் உள்ள உணவகத்தில் கழிவு நீர் மற்றும் இலைகளை மாட்டுக்காக எடுத்து வருவார்.

இதற்காக மில் பின்புறம் உள்ள காட்டுகருவேல மரங்கள் அடர்ந்த ஒற்றையடி பாதையில் நேற்று காலை 8 .30 மணிக்கு சென்று உள்ளார். அப்போது இவரை சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உடலை புதரில் தூக்கி வீசி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மனைவி திரும்பாததால் அவரை, கணவர் அழகர் தேடி சென்று உள்ளார். மனைவி நிர்வாண நிலையில் பிணமாக புதரில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்தை எஸ்.பி., செந்தில்வேலன் பார்வையிட்டார். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் மில்லில் வேலை செய்து வருவதால் அவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருவாடானை டி.எஸ்.பி., ஸ்டான்லி, இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தினர். இதில், இங்கு வேலை பார்த்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் பஸ்சில் தப்பிச் செல்வது தெரியவந்தது.

அதன்படி தேவகோட்டை நெடுஞ்சாலை ரோந்துப் பணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இறங்கும் போது இருவரையும் பிடித்து திருவாடானை போலீசில் ஒப்படைத்தனர். இவர்கள் ஒரிசா மாநிலம் சங்கபாத்தியா என்ற இடத்தைச் சேர்ந்த பிரமோத் சம்பல் (25) பானிபாலை சேர்ந்த ராஜேந்திரநாயக்(26) என்பதும் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்து புதரில் வீசியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து இவர்களை கைது செய்த போலீசார், மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சுசான்பிரதானை தேடி வருகின்றனர்.

*மில் முற்றுகை: இதனிடையே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு மில் நிர்வாகம் இழப்பீடு வழங்கவும், அதுவரை மில் செயல்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, சின்னகீரமங்கலம் மற்றும் வத்தாபட்டி கிராமத்தினர் மில் முன் திரண்டு முற்றுகையிட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.