சென்னை வந்த ரயில் தடம் புரண்டு : 15 பேர் பரிதாப பலி; 60 பேர் காயம்

புவனேஸ்வர் : ஹவுராவிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த, ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு தடம் புரண்டது.ஒரிசா மாநிலம், ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில், 15 பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் சிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது.


சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே உயர் அதிகாரி கூறுகையில், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையத்தில் நிற்காது. அப்படிப்பட்ட நிலையில், வேகமாக வந்த ரயில் திடீரென தடம் புரண்டதில், 15 பேர் பலியாயினர்; 60 பேர் காயமடைந்தனர்’ என்றார்.

ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், 14 பெட்டிகள் தடம் புரண்டதாக கிழக்குக் கடற்கரை ரயில்வே அதிகாரிகளும் கூறியுள்ளனர்.ரயில் தடம் புரண்ட இடம் கும்மிருட்டாக இருந்ததால், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள இடங்களில் இருந்து விளக்குகள் கொண்டு வரப்பட்டு, பின் பணிகள் நடந்தன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஒரிசா நிதியமைச்சர் பிரபுல்லா காடாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரமிளா மாலிக் ஆகியோரை சம்பவ இடத்திற்குச் செல்லும்படி முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அத்துடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஜாஜ்பூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர்.

ஒரிசா மாநில பேரிடர் விரைவு அதிரடிப்படையும் சம்பவ இடத்திற்கு, மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களுடன் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தது. கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது. ரயில்வே இணை அமைச்சர் வேலு மற்றும் ரயில்வே வாரியத் தலைவர் எஸ்.எஸ்.குரானா ஆகியோரை சம்பவ இடத்திற்குச் செல்லும்படியும் அமைச்சர் லாலு கேட்டுக் கொண்டார்.

“ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதும், காயமடைந்த பயணிகள் அலறியதும், உதவி கேட்டு கத்தியதும், இருட்டான அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. ரயில் வேகமாக வந்த போது தடம் புரண்டதால், பல முறை குலுங்கி நின்றது.”ரயில் தடம் புரண்ட பகுதி முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. உதவி கேட்டு பலர் கத்தியது மட்டுமே என் காதில் விழுந்தது. ஒரே குழப்பமாக காணப்பட்டது’ என, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவுராவிலிருந்து கட்டாக்கிற்கு வந்து கொண்டிருந்த அனுபம் நாயக் என்ற பயணி தெரிவித்தார்.

எஸ்-11 பெட்டியில் பயணம் செய்த தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.ரயில் வேகமாக வந்ததால், பெட்டிகள் சில தடம் புரண்டதோடு, தலை கீழாகவும் கவிழ்ந்தது என்றும் அவர் கூறினார். அப்படி கவிழ்ந்த பெட்டிகளில் இருந்து ஜன்னல்கள் வழியாக, பெண்கள் உட்பட பலர் வெளியே வர முயன்றதையும் பார்த்தேன் என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.