கோவையில் நாளை கொங்கு பேரவை அரசியல் எழுச்சி மாநாடு : ‘களை’ கட்டுகிறது கருமத்தம்பட்டி; பிரமாண்ட ஏற்பாடு

திருப்பூர் : கொங்கு வேளாள கவுண்டர் பேரவை முதல் அரசியல் எழுச்சி மாநாடு, கோவை அருகே கருமத்தம்பட்டியில் நாளை துவங்குகிறது. பல லட்சம் கொங்கு இன மக்கள் ஒன்று கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகள் அனைத்துமே பிரமாண்டமாக நடப்பதால், மாநாட்டுத்திடல் “களை’ கட்டியுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். கொங்கு இன மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசியல் ரீதியான அமைப்பு தேவை என்ற வலுவான கோஷத்துடன் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, முதல் அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது.

கோவை, அவிநாசி மெயின் ரோட்டில் கருமத்தம்பட்டியில் அரசியல் எழுச்சி மாநாட்டுக்காக 450 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு முகப்பில் 20 அடி உயரமுள்ள தீரன் சின்னமலை சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 லட்சம் சதுர அடியில் மாநாட்டுப் பந்தல், நிகழ்ச்சியை ஒளிபரப்ப 50 “டிவி’கள், ஒரு பிரமாண்ட எல்.சி.டி., திரை, வளாகம் முழுவதும் 10 இடங்களில் திரையிடுதல், மூன்று லட்சம் பேர் உணவருந்த கேன்டீன் வசதி, மருத்துவம், கழிப்பிட வசதி, பாதுகாப்புப் பணியில் 3,500 பேர், 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் “பார்க்கிங்’ வசதி, 60 அடி நீளம், 40 அடி அகல பிரமாண்ட மேடை, தலைவர்கள் உரையாற்ற திறந்தவெளி மேடை, 55 அடி உயர கொடிக்கம்பம், 100 டேங்கர் லாரிகளில் குடிநீர் வசதி என மிகப் பிரமாண்டமான முறையில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும்; இனத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும்; மதுபானப் பட்டியலில் இருந்து “கள்’ நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வேளாண் தொழிலை பாதுகாத்தல்; கொங்கு மண்டலத்தில் புறக்கணிக்கப்படும் கட்டமைப்பு வசதிகள், பாசன திட்டங்கள், தொழிற்பேட்டைகள், புறவழிச்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு திட்டங்கள், மண்டல தொழில் வளர்ச்சி வாரியம் ஆகியவற்றைச் செயல்படுத்துதல்; கொங்கு இனத்துக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் சட்டத்துக்கு எதிராக, சமுதாயப் பாதுகாப்பை உறுதி செய்தல்; நகர்ப்புற வசதிகளை கிராமப்புறத்தில் ஏற்படுத்துதல்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசியல் எழுச்சி மாநாடு நடக்கிறது.

மாநாட்டு துவக்க நிகழ்ச்சியாக, நாளை விடியற்காலை 3.30 மணிக்கு யாக பூஜை நடக்கிறது. காலை 6.00 மணிக்கு தீரன் சின்னமலை உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. 8.30 மணிக்கு கொங்கு இளைஞர்களால் பொன்காளியம்மன் கோவிலில் இருந்து ஏந்தி வரப்பட்ட கொங்கு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 8.50 மணிக்கு மாநாட்டுக் கொடியை தலைவர் “பெஸ்ட்’ ராமசாமி ஏற்றி வைக்கிறார். 9.00 மணிக்கு தொழில் விவசாயக் கண்காட்சியை பொதுச் செயலர் ஈஸ்வரன் துவக்கி வைக்கிறார். கொங்குநாடு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான நிகழ்ச்சி நடக்கிறது. 9.40 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, தீரன் சின்னமலை, கோவை செழியன், காளிங்கராயன் படங்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

காலை 10.00 மணி முதல் கொங்கு இன கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10.10 மணிக்கு வரவேற்பு நடனமும், 10.15 மணிக்கு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10.20 மணிக்கு மாநாட்டுக் குழுத் தலைவர் கொங்கு நாகராஜ் வரவேற்றுப் பேசுகிறார்.

தொடர்ந்து, காவடியாட்டம், கும்மி, கரகாட்டம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் நாட்டுப்புறப்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6.30 மணிக்கு மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

பொதுச் செயலர் ஈஸ்வரனைத் தொடர்ந்து, தலைவர் “பெஸ்ட்’ ராமசாமி உரையாற்றுகிறார். மாநாட்டுத் தீர்மானம் வாசிக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பு, கட்சி பெயர், கட்சிக்கொடி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இறுதியாக, வாண வேடிக்கை நடக்கிறது. இத்தகவலை மாநாட்டுக் குழுத் தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் கொங்கு சண்முகம், பேரவை மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.