இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு: இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனம்

இலங்கை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் மேல் சபையிலும் எழுந்தது. இந்த பிரச்சினை மீது உரையாற்றிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.


நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின் போது இலங்கை பிரச்சினை எழுந்தது. அப்போது, பாரதீய ஜனதா தலைவர் சந்தோஷ் கங்வார் உரையாற்றுகையில்,

“இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்களத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பர்துஹாரி நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில்,

“இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. இலங்கை தமிழர் நலம் காக்கப்பட வேண்டும்” என்றார்.

ஏ.கிருஷ்ணசாமி (தி.மு.க.) உரையாற்றுகையில்,

“தமிழர்கள் மீது எரிகுண்டுகளை இராணுவம் பயன்படுத்துகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம். அப்பாத்துரை,

“தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டு இருக்கின்றது” என்று குற்றம் சாட்டினார்.

சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) உரையாற்றுகையில்,

“சிறிலங்காவுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபா தாராள கடன் கொடுத்து இருக்கிறது. ஆனால் அந்த பணத்தின் மூலம், சீனா, பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ தளவாடங்களை வாங்கி, அதனை விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பயன்படுத்துகின்றது” என்றார்.

என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்) உரையாற்றுகையில்,

“இலங்கையில் அமைதி திரும்பவும், தமிழர்கள் பாதுகாக்கப்படவும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.

கார்வேந்தன் (காங்கிரஸ்) உரையாற்றுகையில்,

“தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அநாதையாக நிற்கின்றனர். தமிழர்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சிறிலங்கா அரசு ஏற்க வேண்டும்” என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பேராசிரியர் இராமதாஸ் உரையாற்றுகையில்,

“இலங்கை தமிழர் பிரச்சினை, இங்குள்ள தமிழர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. அது இந்தியர்களின் பிரச்சினை. இதனை இலங்கையின் உள் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி விட முடியாது” என்றார்.

எம்.அப்பாதுரை (இந்திய கம்யூனிஸ்ட்), ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.), இ.பொன்னுசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் உரையாற்றினர்.

இதேவேளை, மேல் சபையிலும், இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்தது. இதன் மீது, தமிழ் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றினர்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் உரையாற்றியதாவது:

இந்தியாவில் இருந்து, சிறிலங்கா இராணுவ உதவி வழங்கப்படுகிறது. இதனை சிறிலங்கா அரசு, தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது. எனவே, மத்திய அரசு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்.

இலங்கையில், தமிழர்களை கொல்லும் அரசுக்கு, இந்தியா உதவக்கூடாது. அங்கு மனித உரிமைகளை, இராணுவம் தொடர்ந்து மீறி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூட செல்ல முடியவில்லை.

மனித உரிமை மீறலை தடுக்க முக்கியத்துவம் கொடுத்து, மனிதாபிமான உணர்வுடன் இந்தியா செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த பிரச்சினையை, மத்திய அரசு எடுத்து சென்று, தீர்வு காண வேண்டும்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேச பிரணாப் முகர்ஜி சிறிலங்கா செல்வார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அவர் சிறிலங்கா செல்லவே ஒரு மாதம் ஆகி விட்டது. அவர், அங்கே என்ன பேசினார் என்று தமிழக முதலமைச்சருக்கே தெரிவிக்கப்பட வில்லை. இரு வருந்தத்தக்கது” என்றார் திருநாவுக்கரசர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா உரையாற்றியதாவது:

இலங்கையில், 3 லட்சம் தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி இல்லை. அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையாளராக மட்டும் இந்தியா இருக்கக்கூடாது.

சிறிலங்கா அரசின் மீது மத்திய அரசு தற்போது கொண்டு இருக்கும் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள பிரச்சினை, அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்று கருதி மத்திய அரசு ஒதுங்கி விடக்கூடாது.

சிறிலங்காவுக்கு இந்தியா கதுவீ கருவிகளை கொடுத்தது முற்றிலும் தவறான காரியம். இந்திய கடற்படை கப்பல்கள், சிறிலங்காவுக்காக சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 70 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என்றார் டி.ராஜா.

வி.மைத்ரேயன் (அ.தி.முக.) உரையாற்றிய போது, “இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம்” என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இராஜாங்க மந்திரி வி.நாராயண சாமி பதில் அளித்தார்.

அவர் உரையாற்றுகையில்,

“இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். தமிழர்கள் மீதான தாக்குதலை, இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை. தமிழர் பிரச்சினையில், மத்திய அரசின் நிலைப்பாடு, கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரச தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டு இருக்கிறார்” என தெரிவித்தார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.