(2ம் இணைப்பு)தானே அறிவித்த புதிய “பாதுகாப்பு வலயம்” மீது சிறிலங்கா பீரங்கி தாக்குதல் 27 தமிழர்கள் படுகொலை; 116 பேர் படுகாயம்

புதிய “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர்.


சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த புதிய “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் 60-க்கும் அதிகமான ஆட்லெறி எறிகணைகளை செறிவாக வீசி தாக்குதலை நடத்தினர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரதான வீதியில் இன்று இரவு 7:50 நிமிடமளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதலில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

க.பார்த்தீபன் (வயது 15)

கண்ணன் (வயது 18)

தர்மராஜா (வயது 51)

சி.சதீஸ் (வயது 34)

அ.கிறிஸ்டி குமுதா

ஆகியோர் கொல்லப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 8:00 மணியளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

வீதியில் சென்று கொண்டிருந்த சுமையூர்தி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் சிவகுமார் சசிக்குமார் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Source & Thanks ; puthinam.com

Leave a Reply

Your email address will not be published.