புலிகளை யாராலும் அழிக்க முடியாது – நடிகர் சத்யராஜ்

ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், நடிகர் சத்யராஜ், அன்பாலயா பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.


கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, ஈழத்தமிழர்களை பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ராமேஸ்வரத்தில் ஊர்வலம் நடத்தினோம். சென்னையிலும் நடந்தது. நாங்கள் படைப்பாளிகள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். இதில் சுயநலம் கிடையாது. அரசியலும் இல்லை. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப்புலிகளுக்கு சமம். இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா படங்களிலும் நல்ல தொரு கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும். படங்களின் டைட்டிலிலும் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்தை இடம் பெறச் வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், அரசியல் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் படிப்படியாக வளர்ந்து ஒருவர் புகழ் அடைவார். ஆனால் முத்துக்குமார் மரணத்துக்கு பின் புகழ் அடைந்துள்ளார். அவர் தனது கடிதம் மூலம் மிகப்பெரிய அறிவாளி என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளை அழிப்பதாக தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. புலிகளை யாராலும் அழிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வு பூர்வமாக ஒன்றுபட வேண்டும். உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. இங்கு ஒலிபெருக்கி, மைக் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இது ஜனநாயகம் ஆகாது. தமிழ் சினிமா படங்களில் நல்ல கேரக்டருக்கு முத்துக்குமார் பெயர் சூட்டி கவுரவிக்க வேண்டும்.

டைரக்டர் சீமான் பேசும்போது, திலீபன் போல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்ய நான் திட்டமிட்டேன். டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தடுத்து விட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசுதான் போர் நடத்துகிறது. முத்துக்குமாரை சந்தித்தது இல்லை. இறந்த பிறகுதான் அவரது தியாகமும், உணர்வும் தெரிய வந்தது என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.