நிதாரி கொடூரக் கொலைகள்: மணீந்தர் சிங் பந்தர், கோலிக்கு மரண தண்டனை

காஸியாபாத்: நாட்டையே உலுக்கிய நிதாரி படுகொலைச் சம்பவத்தில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மணீந்தர் சிங் பந்தர் மற்றும் அவரது வேலையாள் சுரீந்தர் சிங் கோலி ஆகியோருக்கு காஸியாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

உ.பி. மாநிலம் நொய்டா அருகில் உள்ள நிதாரி கிராமத்தில், மணீந்தர் சிங்கின் வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் கால்வாயைத் தோண்டிப் பார்த்தபோது எலும்புக் கூடுகளின் குவியல் சிக்கியது. இதனால் நாடே பரபரப்பானது.

மொத்தம் 19 சிறார்கள் மற்றும் ஒரு இளம் பெண்ணின் எலும்புக் கூடுகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

இதையடுத்து மணீந்தர் சிங் பந்தர் அவரது வீட்டு வேலைக்காரர் சுரீந்தர் சிங் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

காஸியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.

நேற்று நீதிமன்றம் மணீந்தர் மற்றும் கோலி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இன்று இருவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி ரமா ஜெயின், இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர் கூறுகையில், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.

இந்த வழக்கில் விசித்திரம் என்னவென்றால் பந்தருக்கு இந்த கொலைகளில் தொடர்பே இல்லை என்று சிபிஐ தனது விசாரணை அறிக்கையில் கூறியிருந்ததுதான். ஆனால் பந்தரும் குற்றவாளி என கூறி அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பலியானவர்களின் குடும்பத்தினர் கொடுத்த மனுக்களின் அடிப்படையில் பந்தர் மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய சிபிஐ கோர்ட் முன்பு உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த வழக்கில் கோலி மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. சிறுவர்களுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவை வைத்துக் கொண்டது, இறந்த உடலுடன் செக்ஸ் உறவை மேற்கொண்டது என்பவை அவற்றில் சில.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.