சுனாமி அழிவை போல மோசமான நிலை * தப்பிவந்தவர்கள் தகவல்

கொழும்பு : பாதுகாப்பான பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற அப்பாவி மக்கள் மீது, விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக, அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை, முல்லைத் தீவில் 175 சதுர கி.மீ., பகுதி மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியையும் மீட்க இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சிக்கியுள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.


கடந்த சில நாட்களாக அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு தப்பி வரும் அப்பாவி மக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. இதை, விடுதலைப் புலிகள் மறுத்தனர். 32 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள புதுமத்தலன் என்ற கிராமத்தில் இருந்து 240 பேரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் காயமடைந்திருந்தனர். இன்னும் சிலர் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

தப்பி வந்தவர்களில் ஆறு பேர் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள். இவர்களில் மேரி கோலேஸ்டிகா என்பவருக்கு 74 வயதாகிறது. இவருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. தப்பி வந்தது குறித்து அவர் கூறியதாவது: புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஒவ்வொரு கிராமமாக தப்பி வந்தோம். எங்களுடன் 2,000 பொதுமக்களும் இருந்தனர். எங்களுடன் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு புலிகள் அனுமதி மறுத்தனர். எங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இதனால், பொதுமக்களுடன் தொடர்ந்து தங்கியிருந்தோம். 2004ல் சுனாமி ஏற்பட்டபோது இலங்கையில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுனாமி கோரத்தை நேரில் பார்த்துள்ளேன்.

தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை சுனாமியை விட மோசமாக உள்ளது. சண்டை நடக்கும் பகுதியில் தினமும் 10ல் இருந்து 15 அப்பாவி மக்கள் உயிரிழக்கும் அவலம் நடந்து வருகிறது. அவர்களின் உடல்களைக் கூட புதைப்பதற்கு ஆள் இல்லை. மிக குறுகிய தூரத்தில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்தினர். நாங்கள் தெரிவித்த எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு மேரி கோலேஸ்டிகா கூறினார்.

மற்றொரு கன்னியாஸ்திரி லூயிஸ் கூறுகையில், “தப்பிச் செல்ல முயன்ற அப்பாவி மக்கள் மீது புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களுடன் சேர்ந்து நாங்களும் தப்ப முயன்றபோது, புலிகள் துப்பாக்கியால் சுட்டதில் என் காலில் குண்டு பாய்ந்தது’ என்றார்.

ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா கூறுகையில், “புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்க முயற்சிப்பர். எனவே, புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

39 புலிகள் பலி: இலங்கை ராணுவ அமைச்சகம் கூறியதாவது: முல்லைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. சின்ன வில்லு என்ற இடத்தில் புலிகளின் முகாம் ஒன்றை ராணுவம் கைப்பற்றியது. தாமரங்குளம் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இங்கு, சண்டையில் பலியான விடுதலைப் புலிகள் ஆறு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வன்னி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சண்டையில் 39 புலிகள் கொல்லப்பட்டனர். புதுக்குடியிருப்பு, குருவிக்குளம், ராமநாதன்புரம் ஆகிய இடங்களில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. குப்பிலியாங்குளம், தாமரைக்குளம் ஆகிய இடங்களில் ஏராளமான வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.