இடம்பெயர்ந்த பொதுமக்கள் விடயத்தில் ஹிட்லர் பாணியில் திட்டமிடுகிறதா இலங்கை அரசு?

இலங்கையில் போர்ப்பகுதியில் இருக்கும் 2 இலட்சம் ஈழத்தமிழர்களையும் புதிதாக அமைக்கவிருக்கும் 5 கிராமங்களில் 3 வருடங்களுக்கு தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது. இது மாதிரி தங்க வைக்க திட்டமிட்டிருப்பதில், ஹிட்லரின் நாஜி முகாம் மாதிரியான திட்டமிடல் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் சந்தேகிக்கிறார்கள்; கவலைகொள்கிறார்கள்.


இந்த 5கிராமங்களில் 50 அல்லது 60 ஆயிரம் குடும்பங்களை தங்கவைக்க இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது.

வன்னிப்பகுதியில் 1000ஏக்கர் பரப்பளவில் 4 கிராமங்களையும், மன்னாரில் 100 ஏக்கர் பரப்பளவில் 1 கிராமத்தையும் அமைக்கவிருக்கிறது இலங்கை அரசு.

இந்த ஐந்து கிராமங்களிலும் பொதுமக்களை 3 வருடங்கள் தங்க வைப்பது என்றும் திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு.

போர்ப்பகுதியில் இருந்து வரும் பொதுமக்களை பலத்த சோதனைகளுக்கு பிறகு ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கிறார்களா என்று சோதனையிட்ட பிறகு அவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைப்பது என்றும் பின்னர் இந்த 5 கிராமங்களில் தங்க வைப்பது எனவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஐந்து கிராமங்களும் இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் என்று திட்டமிட்டிருப்பதை ஏன் என்று கேள்வி கேட்டிருக்கின்றன தொண்டு நிறுவனங்கள்.

இதற்கு இலங்கை அரசு, ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.. அதனால்தான் இந்த கிராமங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும். இங்கிருந்து மக்கள் வெளியேற முடியாது’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ’மக்கள் எவரும் வெளியே செல்ல வேண்டிய அவசியம் எதுவும் இன்றி முகாமை சுற்றியுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக வங்கிகள், தபாலகங்கள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்தும் இந்த கிராமங்களிலேயே அமைக்க விருக்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை அகற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் செல்லும் எனவும், அதனால்தான் மூன்று ஆண்டுகள் பொதுமக்களை தங்க வைக்கவிருப்பதாகவும் அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. பாதுகாப்பு என்பதை தவிர்த்து அடைத்து வைப்பது மாதிரி தான் தோன்றுகிறது.

இது மாதிரி ஒரே இடத்தில் தங்க வைப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள். இது கூடாது என்று இதைப்பற்றி மனித உரிமை அமைப்புகளும், அரசியல் நோக்கர்களும் நிறைய கேள்விகளை எழுப்புகின்றனர்.

ரஜீவ விஜயசிங்க, இது நிச்சயம் சிறைக்கூடம் இல்லை. பாதுகாப்போடு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் இடம்தான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது மாதிரி தங்க வைக்க திட்டமிட்டிருப்பதில், ஹிட்லரின் நாஜி முகாம் மாதிரியான திட்டமிடல் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் சந்தேகிக்கிறார்கள்; கவலைகொள்கிறார்கள்.

தொண்டு நிறுவன ஊழியர்களை அனுமதிப்பதில்லை என்ற அரசின் திட்டத்தாலும் மனித உரிமை அமைப்பினர் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Source & Thanks : lankasri.com

Leave a Reply

Your email address will not be published.