வன்னியில் காயமுற்ற மேலும் 400 பேர் நேற்று திருமலைக்குக் கூட்டிவரப்பட்டனர்

வன்னியில் காயமடைந்த மேலும் 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் ஏற்பாட்டில் இரு தரப்புக்களின் இணக்கத்துடனும் கப்பல் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் புதுமாத்தளனில் இருந்து புறப்பட்ட கப்பல் இரவு 7மணியளவில் திருமலை துறைமுகத்தை அடைந்துள்ளதாக செஞ்சிலுவைச்சங்க கொழும்பு பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 100 ற்கு மேற்பட்டோர் கடுங்காயத்திற்குள்ளாகியிருப்பதுடன் அவர்களில் பலருக்கு அங்கு முறையான சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை.

இதனால் பலரது காயங்கள் நாட்பட்டவையாக இருக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை கொண்டுவரப்பட்டவர்களில் கை ஆல்லது கால்களை இழந்து அங்கவீனமானவர்கள் 50 பேருக்கு மேற்பட்டோர் உள்ளனர்.

கணிசமானோர் தமது தந்தையை, கணவனை, மனைவியை, தாயை, பிள்ளைகளை இழந்தவர்களாக இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

மேலும் சிலர் சிறிய காயங்களுடனும் நோய்வாயப்பட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக அழைத்து வரப்பட்ட நோயாளர்களில் 120 பேர் நேற்று சத்திரசிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர்களில் 12பேர். மூன்று வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக அருகில் உள்ள மெதடிஸ்த பாடசாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வைத்திய சாலையில் 150 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைகளிலும் நோயாளிகளை அனுமதிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு விஷேட வைத்திய நிபுணர்கள், மேலதிக மருந்துப்பொருட்கள் என்பனவும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Source & Thanks : lankasri.com

Leave a Reply

Your email address will not be published.