ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்! எதிரெதிரே வந்ததால் பரபரப்பு விபத்தில் 6 பயணிகள் படுகாயம்

பெங்களூரு:பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் ஒரு ரயில் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு சென்றபோது, ரயில்பெட்டி தடம் புரண்டு, அருகில் சென்ற மற்றொரு ரயிலில் உரசியதில் பயணிகள் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு ஜெய்ப்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அதேசமயம் கண்டோன்மென்ட்டிலிருந்து உதயன் எக்ஸ்பிரஸ் ரயில், சிட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அந்த ரயில் காலியாக வந்தது.தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரு ரயில்கள் வந்தன. இதையறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனே உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலை வேறு தண்டவாளத்துக்கு மாறி செல்ல சிக்னல் கொடுத்தனர். இரு ரயில்களும் பக்கத்து பக்கத்து தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் தண்டவாளத்தின் பிரிவு பகுதியில் வரும் போது காலியான உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டது. அதைத் தொடர்ந்து மூன்று பெட்டிகளும் தடம்புரண்டு, அருகில் சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதைச் சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறினர்.இரு டிரைவர்களும் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் இருந்த பயணிகளில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்தச் சம்பவம் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தையொட்டி பெங்களூரிலிருந்து ஐதராபாத்துக்கு மதியம் 2.15 மணிக்கு செல்லக்கூடிய பிரசாந்தி எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து சென்னைக்கு 2.30 மணிக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், மைசூருவிலிருந்து சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு செல்லக் கூடிய சதாப்தி எக்ஸ்பிரஸ், மாலை 5 மணிக்கு பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ், 5.30 மணிக்கு பெங்களூரிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், 6 மணிக்கு பெங்களூரிலிருந்து தங்கவயல் செல்லும் சுவர்ணா எக்ஸ்பிரஸ் உட்பட அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

பெட்டிகளை அகற்றும் பணிகள் ஆறு மணி நேரம் நடந்தது. அதன் பின் இரவு எட்டு மணிக்கு மேல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கின.இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு, பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அது தவிர்க்கப்பட்டுள்ளது. “இந்த விபத்து நடக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.