மும்பை தாக்குதலுக்கு சதி நடந்தது பாகிஸ்தானில் தான் : பல நாடுகளின் நெருக்கடியால் அம்பலமானது உண்மை

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் விவகாரத்தில் சர்வதேச நிர்பந்தங்களுக்கு பணிந்தது பாகிஸ்தான். “மும்பை தாக்குதல் சதியில் ஒரு பகுதி பாகிஸ்தானில் உருவானது. தாக்குதலின் போது மும்பையில் கைதான அஜ்மல் மற்றும் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளுமே காரணமென, இந்திய அரசு குற்றம் சாட்டியது. அந்த அமைப்புகள் மீதும், பயங்கரவாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் அளித்தது. ஆதாரங்களை பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தியது. கடைசியாக இழுத்தடித்த விவகாரத்திற்கு முடிவாக விசாரணை விவரங்களை, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனர் சத்தியபிரதா பாலிடம் நேற்று ஒப்படைத்தது. அதை பாக்., உள்துறை அமைச்சர் மாலிக் வழங்கினார். அதில், மும்பை தாக்குதல் தொடர்பாக 30 விளக்கக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதோடு, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் விரல் ரேகைகள் மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளை தரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சதி உருவானது எங்கே?: இது தொடர்பாக பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் மேலும் கூறியதாவது: மும்பை தாக்குதல் சதியில் ஒரு பகுதி தான் பாகிஸ்தானில் உருவானது. தாக்குதல் நடத்துவதற்கான பணம் இத்தாலி நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஜாவித் இக்பால் என்பவனுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உண்டு. செயற்கைக் கோள் தொலைபேசிக்கு, ஹூஸ்டனில் வாங்கப்பட்ட “சிம்’ கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் தாக்குதல் நடத்திய போது கைதான அஜ்மல் மீதும், மற்ற பயங்கரவாதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழுவால், இஸ்லாமாபாத் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பல கேள்விகளையும் இந்தியாவிடம் கேட்டுள்ளோம். அஜ்மலின் டி.என்.ஏ., விவரம், இந்தியாவில் 27 “சிம்’ கார்டுகளை பயங்கரவாதிகள் பெற்றது எப்படி என்றும் வினவியுள்ளோம். இந்த “சிம்’ கார்டுகள் மூலமாகத்தான் பயங்கரவாதிகள் உரையாடல் மேற்கொண்டுள்ளனர். அதேபோல், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளுடன் பயங்கரவாதிகள் எப்படி இந்திய பகுதிக்குள் பயணிக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளோம்.

மும்பை தாக்குதல் தொடர்பாக மொத்தம் ஒன்பது பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களில் சிலர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள். அதனால், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பணம் கொடுத்த ஹமாத் அமீன் சாதிக், ஸ்பெயின் நாட்டிலிருந்து, “வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்’ என்ற அதி நவீன தொலைபேசி இணைப்பைப் பெற்ற மற்றொரு பாகிஸ்தான் நபரான ஜாவித் இக்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். மும்பை தாக்குதலின் போது கைதான அஜ்மலின் வாக்குமூலம் பாகிஸ்தான் கோர்ட்டால் பதிவு செய்யப்பட வேண்டும். அதனால், அஜ்மலையும் எங்களின் காவலில் வைத்து விசாரிக்க விரும்புகிறோம். மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயன்படுத்திய படகின் இன்ஜினை விற்ற கடை எது என்பது கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்களின் விசாரணைப்படி, ஒன்பது பயங்கரவாதிகள் தான் கராச்சியில் இருந்து மும்பை சென்றுள்ளனர். அவர்கள் மூன்று படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டரான ஜாகீர் ரகுமான் லக்வி என்பவன், மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்தவன் என இந்திய அரசு கூறியுள்ளது. அவன் இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்து, விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சரார் ஷா என்பவனையும் கைது செய்துள்ளோம். மும்பை தாக்குதலில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பற்றிய விரிவான மற்றும் தெளிவான விவரங்களைத் தரும்படியும் இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், நாங்கள் கேட்ட 30 கேள்விகளுக்கு இந்தியா பதில் தர வேண்டும். அப்படி தருவதன் மூலம் தான் விசாரணை மேலும் வலுவடையும். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சாதிக் என்பவன் தான், மும்பை தாக்குதலை நடத்தியதில் முக்கிய பங்காற்றியவன்; பண சப்ளை செய்தவன். அத்துடன் கான், ரியாஸ் என்பவனும் இதற்கு காரணமாக இருந்துள்ளனர் என்று எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் மாலிக் கூறினார். அமெரிக்கா உட்பட பல நாடுகள் நெருக்கடியும், தொடர்ந்து இந்தியா மேற்கொண்டு வரும் தூதரக நெருக்கடிகளும், தற்போது பாகிஸ்தான் இவ்விஷயத்தில் ஒப்புதல் தரும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இனி கசாப்பை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் 30 கேள்விகள் மூலம் இதை இழுத்தடிக்குமா அல்லது உருப்படியாக ஏதும் நடவடிக்கை எடுத்து முடிவு காணுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.

“விரைவில் பதில் கொடுப்போம்’: மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கொடுத்த பதில்களையும், கேள்விகளையும் பரிசீலித்த பின், அதற்கு பதில் அளிக்கப்படும் என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானுக்கான நமது ஹை கமிஷனர் முறையான அறிக்கையை பெற்றவுடன், அதை முழுமையாக ஆய்வு செய்து தக்க பதில் அளிக்கப்படும். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்த விவரங்களை மீடியாத் தகவல்கள் மூலம் இந்திய அதிகாரிகளும் அறிந்துள்ளனர். விரைவில் சரியான பதில் தரப்படும்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.