அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்?

வாஷிங்டன் : விண்வெளியில் ரஷ்ய மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு சிதறின. விண்வெளியில் இரு செயற்கைக்கோள் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை.அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கோட்லிக் கூறியதாவது: அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இரிடியம் என்ற செயற்கைக் கோள், 1997ல் விண்ணில் ஏவப்பட் டது. இதன் எடை 600 கிலோ.

ரஷ்யா சார்பில் 1993ல் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. சிலிண்டர் வடிவிலான இதன் எடை 850 கிலோ. பத்தாண்டுகளுக்கு முன் இந்த செயற்கைக்கோள் செயலிழந்து விட்டது. இருந்தாலும், தொடர்ந்து விண்ணில் சுற்றி வந்தது. இந்த இரு செயற்கைக்கோள்களும் கடந்த 10ம் தேதி ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. சுற்று வட்டப்பாதையில் இரு செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது இதுவே முதல் முறையென நம்பப்படுகிறது. இவ்வாறு கோட்லிக் கூறினார். நாசாவைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான்சன் கூறுகையில், “செயற்கைக் கோள்கள் மோதியதால் எவ்வளவு துகள்கள் விண்ணில் உருவாயின என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை’ என்றார். இன்றைய நிலையில், விண்வெளியில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதில், செயற்கைக் கோள் சிதறல்களும் அடங்கும். இவற்றில் சில 10 செ.மீ., விட்டம் கொண்டவை. தற்போது மோதிக் கொண்ட செயற்கைக் கோள்கள் 780 கி.மீ., உயரத்தில் நடந்தது என்றும், சைபீரியா பகுதிக்கு நேராக விண்வெளியில் இது நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் சிதறல் பாகங்கள் எப்படி பூமியில் விழப்போகிறது என்பதை இப்போது மதிப்பிட முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்கனவே விண்வெளிப் போட்டி உண்டு என்பதால், இந்த மோதலை அந்தக் கருத்தில் முடிச்சுப் போட வேண்டாம்; இது தற்செயலாக நடந்த நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணில் விண்வெளி ஆய்வு நிலையமும், அதில் மூன்று விண்வெளி வீரர்களும் தங்கி ஆய்வு நடத்தி வருகின்றனர். அதற்கு ஏதும் பாதிப்பு வராது என்று, “நாசா’ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.