“இது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல்”; பிரித்தானிய சிறப்பு தூதுவரை நிராகரித்தது சிறிலங்கா: மேற்குலகின் முகத்தில் அடி!

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது.


பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், தமது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை, சிறிலங்காவின் தற்போதைய மனித அவல நிலை தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு தூதுவராக நேற்று வியாழக்கிழமை நியமித்தார்.

இந்த நியமனத்தை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அவசியமற்ற தலையீட்டினை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், சிறிலங்காவின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உள்ள கௌரவத்திற்கு இத்தகைய முயற்சி கேடு விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவை மேற்கோள் காட்டி, அனைத்துலக ஊடக நிறுவனமான ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியா மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு பிரதிநிதி நியமனம் என்பது, அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், அதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் ரோகித போகல்லாகம தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக “புதின”த்திடம் கருத்து வெளியிட்ட சில அரசியல் அவதானிகள், “சிறிலங்கா நடத்தும் இன அழிப்புப் போரை, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என இதுவரை நாளும் வக்காலத்து வாங்கிய மேற்குலகத்தின் முகத்தில் விழுந்த அடி தான் இது” எனத் தெரிவித்தனர்.

சிறிலங்காவின் நிராகரிப்பு தொடர்பாக பிரித்தானிய அரச தரப்பிடமிருந்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.