இந்தியா நாடாளுமன்றம் முன்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு கறுப்புச்சட்டை அணிந்து சென்றனர். மேலும், நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் வரவு-செலவுத் திட்ட கூட்டத் தொடர் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான நேற்று அரச தலைவர் பிரதீபா பட்டீல் உரையாற்றினார். அப்போது இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இராமதாஸ், பொன்னுசாமி, செந்தில், ஏ.கே.மூர்த்தி ஆகிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகிய 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேரும் முழக்கம் எழுப்பினர்.

அரச தலைவர் உரையை தொடங்கியதும்,

“இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் தேவை”

“அரச தலைவர் அவர்களே, நீங்கள் தலையிட்டு போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும்”

என முழக்கமிட்டபடி இருந்தனர்.

மேலும், இவர்கள் 8 பேருமே நேற்று கறுப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.

அரச தலைவர் உரையாற்றியபோது, “இலங்கை இனப்பிரச்சினையில் இரு தரப்பினரும் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்” என்றார்.

உடனே கோவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தான் அணிந்திருந்த கறுப்புச் சட்டையை சபையிலேயே கழற்றி தனது பைக்குள் வைத்துக் கொண்டார்.

அதே நேரத்தில், பொள்ளாச்சி கிருஷ்ணனும் மேசையை தட்டி பாராட்டினார். ஆனால், அவரை சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் தடுத்தார்.

இதேவேளை, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா தலையிட வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அனைவருமே கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

மேலும்,

“தமிழர்களின் தாய்வீடு இந்தியா”

“இலங்கை தமிழர்களை காப்பது இந்தியாவின் கடமை”

“ஐ.நா. சபைக்கு இலங்கை பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும்”

என்பது போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர்.

டி.ராஜா பேசுகையில், “தமிழர்களுக்கு எதிராக தீவிரமான போரை ராஜபக்ச அரசு முடுக்கிவிட்டு இருக்கிறது. தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

Source & Thanks ; puthinam.com

Leave a Reply

Your email address will not be published.