சிறிலங்காவுக்கு ஆயுத உதவியைக் கண்டித்து இராணுவ அலுவலகம் முற்றுகை: 100-க்கும் அதிகமான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கைது

சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதைக் கண்டித்து தமிழ்நாடு சென்னையில் உள்ள தென்மண்டல இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தச் சென்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த மாதம் 30 ஆம் நாள் முதல் பெப்ரவரி 9 ஆம் நாள் வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

பின்னர், பெப்ரவரி 11 ஆம் நாள் முதல் இரண்டாம் கட்ட நீதிமன்ற புறக்கணிப்பையும், நாள்தோறும் ஒரு போராட்டத்தையும் அவர்கள் தொடங்கினர்.

போராட்டத்தின் 2 ஆம் நாளான இன்று வியாழக்கிழமை ஏற்கனவே அறிவித்தபடி சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களை வழங்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவ தலைமையகத்தை முற்றுகையிடுவதற்காக நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து பேருந்து மூலமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

சென்னை பிராட்வே பகுதியையும், தீவுத் திடலையும் இணைக்கும் முத்துசாமி பாலம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றுகூடிய அவர்கள், அங்கிருந்து இராணுவ தலைமை அலுவலகம் நோக்கி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.

ஆனால், தீவுத் திடல் அருகே அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.

இதனால், வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பிடித்து தள்ளிவிட்டனர். ஒரு சிலர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி இராணுவ தலைமை அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

இறுதியில் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், அந்த இடத்திலேயே அமர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

– இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்

– அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்

– சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது, ஊடகவியலாளர்களிடம் பேசிய பால்கனகராஜ், “இலங்கையில் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்தார்.

பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திருமண அரங்கம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று மாலையளவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர்.

தொடர்ந்து நாளையும் அவர்கள் போராட்டம் நடத்தவிருக்கின்றனர். இராணுவ தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணி ஆகியவற்றில் சமூக நீதி வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே. பாலு அறிவழகன், அப்துல் ரகுமான், முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருப்பன், ரஜினி, பாரி, தமயந்தி, செங்கொடி செங்கொடி, சுஜாதா, குமணராசா, கே.வி.இராமலிங்கம் உட்பட பெருமளவிலனோர் கலந்து கொண்டனர்.

இது போன்று ஒரு சில வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளைக் கிழித்தனர். அந்தப் பதாகைகளில் உள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உருவப் படம் மீது சாம்பாரை ஊற்றினர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கிருந்த பதாகைகளை அப்புறப்படுத்தினர்

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.