மும்பை தாக்குதலில் தொடர்பு: பாகிஸ்தான் ஒப்புதல்

மும்பை தாக்குதல் சதித் திட்டத்தின் சில பகுதிகள் தங்கள் நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.


கடந்த நவம்பரில் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் மும்பை போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எனினும், இதை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வந்தது. பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை கொடுத்த பின்னரும் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பான சதித்திட்டத்தின் சில பகுதிகள் தங்களது நாட்டின் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் முதன் முறையாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்விஷயத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவாகவே பாகிஸ்தான் இருக்கும். இந்த வழக்கு விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் அஜ்மல் கசாப் மற்றும் 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை தாக்குதலுக்கான சதித் திட்டங்களின் சில பகுதி பாகிஸ்தான் மண்ணில் தீட்டப்பட்டுள்ளது. எனினும் இதன் பெரும்பாலான பணிகள் இந்தியாவில் தான் மேற்கொள்ளப்பட்டன.

லஷ்கர் இ-தொய்பாவின் லாக்வி என்ற அமைப்பு தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ரப்பர் படகு வாங்கிய கடையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். படகு வாங்கியவரின் தொலைபேசி எண் கிடைத்தது. ஆனால் அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை.

நீதிமன்றத்தில் அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலம், சிம் கார்டுகள் வாங்கப்பட்டது உள்ளிட்ட சில விவரங்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.