ஈழத் தமிழர் படுகொலை: காங்கிரஸ் கொடி எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் கொடியை எரித்து, இந்திய மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யக்கோரியும் சென்னையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தினர்.

உயர்நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், நீதவான் நீதிமன்றங்களில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் முன்னிலையாகவில்லை.

ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டும் கறுப்பு உடை அணியாமல் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவசர உத்தரவுகளை பெற்றுச் சென்றனர்.

இது மட்டுமல்லாமல், வழக்கு தொடர்ந்த பொதுமக்களில் பலர் நீதிமன்றத்தில் தாங்களே முன்னிலையாகி தங்களுக்கு தேவையான உத்தரவுகளை பெற்றுச் சென்றனர்.

வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற வளாகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி கிடந்தன.

உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகங்களை சுற்றி வந்து இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதேவேளை, உயர்நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், செயலாளர் வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் கே.பாலு, பெண் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் பிரசன்னா, வழக்கறிஞர் சிவகாமி, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் வழக்கறிஞர் சக்திவேல் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற பின்னர் வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

அதேவேளை, வழக்கறிஞர்களின் ஒரு பிரிவினர் உயர்நீதிமன்ற பிரதான வாசல் முன்பாக குவிந்தனர். காங்கிரஸ் கொடியையும், சோனியா காந்தி படத்தையும் எரித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமையில், வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.