புலிகளின் கையெறி குண்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு

கொழும்பு : முல்லைத் தீவில் புலிகளின் கையெறி குண்டு தொழிற்சாலையை, ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். அத்துடன், ராணுவத்தினர் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மூன்று புலிகள் கொல்லப்பட்டனர்.

புலிகளின் வசமுள்ள சிறிய பகுதியையும் கைப்பற்ற தீவிர தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்தினர், முல்லைத் தீவு அருகே சுகந்திராபுரம் பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்திய போது, புலிகள் கையெறி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்திய தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.

அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதற்கு அருகே அச்சகம் ஒன்றும் இருந்தது. அங்கிருந்த அச்சு இயந்திரங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் புலிகள் பயன்படுத்தி வந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் கட்டிங் இயந்திரங்களையும் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.சுரந்தரன்புரம் பகுதியில், நேற்று முன்தினம் மதியம் இரண்டு மோட்டார் பைக்குகளில் சென்ற விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில், மூன்று புலிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர் அந்த புலிகளின் உடல்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. “ராணுவத்தினரின் தீவிர தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல், புலிகள் தங்களின் ஆயுதங்களைப் போட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்கள் விட்டுச் சென்ற சிறிய ரக பீரங்கிகள் உட்பட பல விதமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. “மேலும், பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல நினைக்கும் அப்பாவி மக்களையும் புலிகள் தாக்கி வருகின்றனர்’ என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.