டிரான்ஸ்பருக்கு ரூ.2 கோடி தந்த ‘போதை’ ஐ.பி.எஸ்.,

மும்பை:சொந்த மாநிலம் கேரளாவுக்கு டிரான்ஸ்பர் பெறுவதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்ததால், அந்தக் கடனை சமாளிக்கவே போதை மருந்து கடத்தியதாக, போலீசில் சிக்கிய ஐ.பி.எஸ்., அதிகாரி சாஜி மோகன் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சாஜி மோகன், சண்டிகாரில் உள்ள போதை தடுப்புப் பிரிவு இயக்குனராக 2006ம் ஆண்டில் பணி அமர்த்தப்பட்டார். கடத்தல் சம்பவங்களில் பிடிபட்ட போதைப் பொருட்களை, பதுக்கியதாக இவரை மும்பை போலீஸ் கைது செய்தது. சமீபத்தில், மும்பை ஆஷிவாரா பகுதி சூதாட்ட கிளப் ஒன்றில், பயங்கரவாத தடுப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது, 12 கிலோ ஹெராயின் போதை மருந்து சிக்கியது.

இது தொடர்பாக விக்கி ஓபராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்த போது, போதை மருந்து கடத்தலின் பின்னணியில் சாஜி மோகன் இருந்தது தெரிய வந்தது.சண்டிகாரில் பணியில் இருந்தபோது, மீட்கப்பட்ட கடத்தல் போதை மருந்துகளில் 70 கிலோ வரை மும்பை ஆஷிவாரா கிளப்பில் மோகன் பதுக்கியுள்ளார்; இதற்கு ஓபராய் உடந்தையாக இருந்துள்ளார் என்று மும்பை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சண்டிகாரில் இரண்டாண்டு பணியமர்த்தப்பட்ட மோகன், அங்கு இன்னும் ஓராண்டு பணி நீடிக்கப்படலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து, சொந்த மாநிலத்துக்கு டிரான்ஸ்பர் பெற இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகவும், அந்தப் பணத்தை ஈடுகட்டத் தான் போதை மருந்துகள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் மோகன் கூறியுள்ளார்.

சண்டிகாரில் பணிக்காலம் முடியும் முன்பே, கடந்த டிசம்பர் 31ம் தேதி, கொச்சியில் உள்ள அமலாக்கப் பிரிவு துணை இயக்குனராக பணியில் மோகன் சேர்ந்து விட்டார். ஆனால், அதற்குள் போதை மருந்து கடத்தல் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில், வசமாக சிக்கிக்கொண்டார்.

இதுகுறித்து, மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “டிரான்ஸ்பருக்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்தார் மோகன் என்ற விவகாரம் பற்றி நாங்கள் விசாரிக்கப் போவதில்லை’ என்று தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.