சர்க்கரை இனிக்கிறது; விலை கசக்கிறது : மூட்டைக்கு ரூ. 400 திடீர் உயர்வு

கோவை: பருவத்தில் பெய்யத் தவறிய மழை, விளைநிலங்களை மனையிடங்களாக மாற்றியது போன்ற காரணங்களால், கரும்பு உற்பத்தி குறைந்து, சர்க்கரை விலை மூட்டைக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவு கரும்பு உற்பத்தியாகும் மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் கடந்த பருவத்தில் எதிர்பார்த்த மழை இல்லாததால், விளைச்சல் இல்லாமல், கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மார்க்கெட்டில் மூட்டை ஒன்றுக்கு 400 ரூபாய் வரை சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

இந்தியா முழுக்க சர்க்கரை விலை வழக்கமாக சீராக இருக்கும். கரும்பு விளைச்சல் பாதிக்கப்படும்போது மட்டுமே விலை உயரும்; கரும்பு உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும். லாரி ஸ்டிரைக்கிற்கு முன், 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரையின் விலை 1,850 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகள் 19 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சர்க்கரையை, 23 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை உயர்வால், டீ, காபி, மற்றும் இனிப்பு விலை உயர வாய்ப்புள்ளது. இந்தியாவில், 80 சர்க்கரை ஆலைகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சர்க்கரை அனுப்பப்படுகிறது. மகாராஷ்டிராவில், கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், சர்க்கரை உற்பத்திக்கு தேவையான கரும்புக்கு மற்ற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை உள்ளது.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அறுவடையாகும் கரும்பு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், இந்தியா முழுவதும் கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் நிதி கொடுக்க வேண்டும். அதற்காக, ஆலை உரிமையாளர்கள் இணைந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை உயர்த்தி இருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. என்ன தான் விலை உயர்ந்தாலும், ரேஷனில் சர்க்கரை கிலோ ரூ.13.75க்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் சற்று ஆறுதலான விஷயம்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.