பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக படையினரால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது: இளம்பரிதி

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக படையினர் வெளியிட்ட குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு பிரிவு அரசியல் பொறுப்பாளர் சி இளம்பரிதி மறுத்துள்ளார்.

இலங்கை படையினரின் இராணுவக் கொமாண்டோக்களே பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசித்து உடையார்கட்டு சுதந்திரபுரத்தில் நேற்று தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கடந்த சில வாரங்களாக பொதுமக்களை பாரியளவில் கொலை செய்த இலங்கைப் படையினர் தற்போது தமது தவறுகளை திசை திருப்பவே இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச சமூகம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பு அரசாங்கம், நாள்தோறும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொலை செய்கிறது. மருத்துவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துகிறது. அத்துடன் உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் இளம்பரிதி குற்றம் சுமத்தியுள்ளார்

எனினும் தமிழக மக்களும் புலம்பெயர்ந்துள்ள மக்களும் உண்மை நிலையை உணர்ந்து தமது சர்வதேச அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் தமது பொய் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது என இளம்பரிதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாக தெரிவித்துள்ள இளம்பரிதி, குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : lankasri.com

Leave a Reply

Your email address will not be published.