இலங்கை வன்முறைகள் தொடர்பாக எமது கவனத்தை செலுத்துகின்றோம்: பான் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்துமே நான் எனது கவனத்தை செலுத்துகின்றேன். மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனத்தை செலுத்துகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எனது அரசியல் பணிப்பாளரை அனுப்பியுள்ளேன். மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு ஒரு குழுவை நேரம் வரும் போது அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக நியூயோர்க்கிற்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவரின் பிரதிநிதியை நான் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனும் தொலைபேசி ஊடாக உரையாடியிருந்தேன்.

இருந்த போதும், இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட மாட்டாது.

இலங்கை மற்றும் காசா பகுதிகளின் நிலமைகள் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளுக்கு உட்பட்டவையாக இருந்தல் வேண்டும் என்ற போதும், மனிதாபிமான விதிகள் மீறப்படுவது தொடர்பாக நான் எனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்திருந்தேன்.

தற்போதைய வன்முறைகள் தொடர்பாகவும், அரசியல் தீர்வின் தேவை குறித்துமே நான் எனது கவனத்தை செலுத்துகின்றேன். மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனத்தை செலுத்துகின்றோம் என்றார் அவர்.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.