வன்னியில் நேற்றும் 34 தமிழர்கள் படுகொலை; 46 பேருக்கு படுகாயம்: மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டது.

மருத்துவமனை மீது தாக்குதல்

இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் “புதினம்” செய்தியாளர், முழுமையாக மீட்பு பணிகள் செய்ய முடியாத நிலையில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் தொடர்ச்சியாக நேற்று வரை நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் இருக்கும் நோயாளர்களின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.