வன்னியில் இருந்து வந்த பொதுமக்களில் பலரை காணவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களில் 70 பேர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலரை காணவில்லை என்றும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15 பெண்கள் உட்பட 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இது தொடர்பில் வவுனியா காவல் நிலையத்திலோ அல்லது மனித உரிமை அமைப்புக்களிடமோ முறையிட முடியாமல் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நலன்புரி முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் எவரும் பார்வையிட முடியாது.

இந்நிலையில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயரதிகாரிகள் சிலரின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் போதாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடுவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை சென்றவர்களில் 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் பலரை படையினர் தனியாக அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பான தகவலை வெளியிட்ட வவுனியா செயலக அதிகாரி ஒருவர் அழைத்து செல்லப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.