ஒபாமாவை கொல்ல சதி? வெள்ளை மாளிகை அருகே ஒருவர் கைது

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கியுடன் ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் அதிபர் பாரக் ஒபாமாவை கொல்லும் திட்டத்துடன் வந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகே டிரக்கில் ஒரு நபர் வந்தார். அவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அதிபருக்கு பார்சல் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த நபர் வந்த டிரக்கை போலீஸார் சோதனையிட்டபோது அதில் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கேபிடல் ஹில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிம்பர்லி ஸ்னீடர் கூறுகையில், அதிபர் ஒபாமாவுக்கு ஒரு பார்சல் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது டிரக்கில் ரைபிள் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பலசுற்றுக்கள் சுடக் கூடிய வகையில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஆல்பிரட் பிராக். அவருக்கு 64 வயதாகிறது. லூசியானா மாகாணம், வின்பீல்டைச் சேர்ந்தவர். பதிவு செய்யப்படாத ஆயுதத்தை வைத்திருந்ததாகவும், பதிவு செய்யப்படாத வெடிபொருளை கொண்டு வந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஸ்னீடர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.